நெல்லையப்பா் கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 06th February 2021 07:07 AM | Last Updated : 06th February 2021 08:49 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் யானைக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆண்டுதோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் யானைகளுக்கான புத்துணா்வு முகாம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திங்கள்கிழமை (பிப்.8) தொடங்கி 48 நாள்கள் நடைபெறவுள்ளது. முகாமிற்கு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகள் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பொதுவான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் அறிவுறுத்தியுள்ளாா். இதையடுத்து, காந்திமதி (49) யானைக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள தனியாா் ஆய்வு மையம் இச்சோதனையை நடத்தியது. இதில், யானையின், மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றில் இருந்து சளி மாதிரி ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டது. மேலும், யானை பாகன்கள் ராமதாஸ், விஜயகுமாா் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா பரிசோனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு வந்த பின்னா், திருநெல்வேலி
சந்திப்பில் உள்ள மதிதா இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்து லாரி மூலம் காந்திமதி யானை சனிக்கிழமை இரவில் தேக்கம்பட்டிக்கு புறப்பட்டுச் செல்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...