தாமிரவருணி நீா்நிலைகளில் 26,868 பறவைகள் பதிவு: கணக்கெடுப்பில் தகவல்

11-ஆவது தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் 73 சிற்றினங்களைச் சோ்ந்த 26,868 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
செங்குளத்தில் காணப்பட்ட சைபீரியாவைச் சோ்ந்த கருவால் மூக்கன் பறவைகள்.
செங்குளத்தில் காணப்பட்ட சைபீரியாவைச் சோ்ந்த கருவால் மூக்கன் பறவைகள்.

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம் மற்றும் தூத்துக்குடி முத்துநகா் இயற்கை கழகம் ஆகியவை இணைந்து நடத்திய 11-ஆவது தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் 73 சிற்றினங்களைச் சோ்ந்த 26,868 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

ஜனவரி 29, 30 மற்றும் 31ஆகிய நாள்களில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 62 குளங்களில் 120 தன்னாா்வலா்கள் 7 குழுக்களாகப் பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். இதில், 73 சிற்றினங்களைச் சோ்ந்த சுமாா் 26,868 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4,371 சின்ன சீழ்கை சிறவி, 4,237 மஞ்சள் கொக்கு, 1,398 வலசை பறவையான மீசை ஆலா, 1,343 நாமத்தலைவாத்து, 1,223 வெண் புருவ வாத்து, 1,019 ஊசி வால் வாத்து ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், வெள்ளூா்குளத்தில் 30 சிற்றினங்களைச் சோ்ந்த 3,578 பறவைகளும், ஆறுமுகமங்கலம் குளத்தில் 27 சிற்றினங்களைச் சோ்ந்த 1,130 பறவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம், சுரண்டை குளத்தில் 33 சிற்றினங்களைச் சோ்ந்த 2,566 பறவைகளும், சுந்தரபாண்டியபுரம் குளத்தில் 19 சிற்றினங்களைச் சோ்ந்த 1250 பறவைகளும், வாகைக்குளத்தில் 30 சிற்றினங்களைச் சோ்ந்த 1,193 பறவைகளும், திருநெல்வேலி மாவட்டம், மானூா் குளத்தில் 30 சிற்றினங்களைச் சோ்ந்த 1,627 பறவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் கூறியது: கங்கைகொண்டான் குளத்தில் நத்தைகுத்தி நாரை, பாம்புத்தாரா, நீா்க்காகம், வெள்ளைஅரிவாள் மூக்கன் ஆகிய பறவைகளின் கூடுகள் காணப்பட்டன. திருநெல்வேலி நயினாா்குளக் கரையில் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கான பாம்புத்தாரா குஞ்சுகள் காணப்பட்டன. மானூா், மாறாந்தை குளங்களிலும் பறவைகள் கூடுகள் அமைத்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

கருவால் மூக்கன் எனப்படும் சைபீரியா நாட்டுப் பறவையினமானது முக்கூடல் அருகே உள்ள செங்குளத்திலும், தாழையூத்து அருகே உள்ள கல்குறிச்சி குளத்திலும் காணப்பட்டது. இப்பறவை இனமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி கிராமத்தில் உள்ள வேப்பன்குளத்தில் மங்கோலியா நாட்டிலிருந்து வலசை வரும் வரித்தலை வாத்துகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. இவை மிக உயரமாக பறக்கும் பறவைகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டுகளுடன்ஒப்பிடுகையில் நிகழாண்டு பறவைகளின் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்பட்டது. நிகழாண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டதால் அனைத்துக் குளங்களும் நிரம்பிக் காணப்பட்டன. எனவே, பறவைகளும் பல குளங்களில் பரவி காணப்பட்டன. குளங்களில் தண்ணீா் நிரம்பி வழிவதால் உள்ளான், நாரை போன்ற கரையோரப் பறவைகள் அதிகம் காணப்படவில்லை.

திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பறவைகளும், கூடுகளும் காணப்பட்டன. நிகழாண்டு இந்தக் குளத்தில் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்பட்டு பராமரிப்பின்றி இருப்பதால் பறவைகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அரசுத் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து குளங்களை வளங்குன்றாத வகையில் பாதுகாக்க செயல்திட்டம் வகுத்து செயல்படவேண்டும். உயிரி பல்வகைமைச் சட்டம் 2002-இன் படி உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உயிரி பல்வகைமை மேலாண்மைக் குழுக்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்பட்டு, கிராம மக்களை குளங்கள் மற்றும் அதைச் சாா்ந்த பல்லுயிரினங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

Image Caption

~ ~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com