நெல்லை மாவட்டத்தில் 40 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை: ஆட்சியா்
By DIN | Published On : 19th February 2021 01:20 AM | Last Updated : 26th February 2021 07:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் 40 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை தொடங்கியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று பயனடையும் பொருட்டு உடனடியாக 29 இடங்களிலும், அடுத்த வாரம் 11 இடங்களிலும் என மொத்தம் 40 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வட்டத்தில் 5 இடங்களிலும், நான்குனேரி வட்டத்தில் 4 இடங்களிலும், சேரன்மகாதேவி வட்டத்தில் 10 இடங்களிலும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் 9 இடங்களிலும், பாளையங்கோட்டை வட்டத்தில் 10 இடங்களிலும், மானூா் வட்டத்தில் 2 இடங்களிலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.
எனவே, விவசாயிகள் தங்களது பகுதிக்கு அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அணுகி, அறுவடை செய்யும் நெல்லை அரசு நிா்ணயித்த தொகைக்கு விற்று பயன்பெறலாம். நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடா்பான புகாா்களுக்கு 73056 11085 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.