மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் போராட்டம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள்.
கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 43-ஆவது ஆட்சிப்பேரவைக் கூட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு துணைவேந்தர் கா.பிச்சுமணி தலைமை வகித்து பேசியது: கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை இப்பல்கலைக்கழகம் செய்து வருகிறது. கல்வி, கலை, பண்பாட்டுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் வகையில் பாடுபட்டு வருகிறது. 2400 மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பயின்று வருகிறார்கள். பல்கலைக்கழக ஆளுகைக்கு உள்பட்ட 92 கல்லூரிகள், 4 உறுப்புக்கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நேரடியாகவும், தொலைநிலை தொடர்கல்வி முறையிலும் பயின்று வருகிறார்கள். நாக் கமிட்டியால் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது.
 
பாரதி பெயரில் இருக்கை:
இப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பன்னாட்டு தரம் வாய்ந்த மென்பொருள் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு புதிய தொலைத்தொடர்பு கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஆய்வறிக்கைகள் இப் பல்கலைக்கழகம் சார்பில் சமர்பிக்கப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது. இப் பல்கலைக்கழகத்தில் ரூ.9.1 கோடி மதிப்பீட்டில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பாரதியாரின் எண்ணங்களை இளம்தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த இருக்கை செயல்படும். தேசிய ஒருமைப்பாடு, சாதி ஒழிப்பு, சமதர்மம் உள்ளிட்ட அவரது கொள்கைகளை பிரதிபலிக்கும். மேலும், பாரதியாரின் கட்டுரைகள், கவிதைகள், கையெழுத்து பிரதிகள் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

புதிய இருபாடங்கள்: உயர்கல்வித்துறையில் ஏராளமான சவால்கள் இப்போது உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கு ஏற்ற பாடத்திட்ட முறைகள் இல்லாததாலும், சமூக பொருளாதாரச் சூழலுக்கும், கல்வி முறைகளுக்கான இடைவெளியும் பெரும் சிக்கல்களை உருவாக்குகின்றன. அதனை நீக்கும் வகையில் இப் பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இப் பல்கலைக்கழகத்தின்கீழ் மேலும் 2 புதிய பாடங்கள் கற்பிக்க பல்கலைக்கழக நிதிநிலைக் குழு அனுமதியளித்துள்ளது. இளநிலை தொழில் கல்வி, உணவு பதப்படுத்துதல் பகுப்பாய்வு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நுட்பங்கள்  ஆகிய தலைப்புகளில் மூன்றாண்டு பாடத்திட்டத்துடன் கற்பிக்கப்படும். மேலும், காளாண் வளர்ப்பு தொழில்முறைகளைக் கற்பிக்க பணஅணை அமைக்க ரூ.1.6 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்றார் அவர்.

உறுப்பினர்கள் தர்ணா: இக் கூட்டத்துடன், சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்குகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மூட்டா அமைப்பினரும், ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் ஆட்சிப்பேரவை கூட்டத்தில் இருக்கைகளில் இருந்து எழுந்து தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் நிறுத்தப்பட்ட தகவல்களை முறையாக தெரிவிக்கவில்லையெனவும், நீதிமன்ற வழக்குகள் இருந்தாலும் ஒத்திவைத்து அடுத்ததாக தேர்தல் நடைபெறும் நாளை உடனடியாக இக் கூட்டத்தில் துணைவேந்தர் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த துணைவேந்தர், சிண்டிகேட் தேர்தல் தொடர்பாக மொத்தம் 4 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கெனவே தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

அதில் ஒரு வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இம் மாதம் 22 ஆம் தேதி வர உள்ளதால் தேர்தல் நடத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார். துணைவேந்தரின் விளக்கத்தை ஏற்காத உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உணவு இடைவேளைக்கு பின்பு கூட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் போராட்டம் கைவிடப்படாத நிலையில், தேதி குறிப்பிடாமல் ஆட்சிப்பேரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணைவேந்தர் அலுவலக வாயிலில் மூட்டா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com