அனைத்துத் துறைகளிலும் விருதுகளை குவிக்கும் தமிழகம்: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பெருமிதம்

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் விருதுகளைக் குவித்து, இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் விருதுகளைக் குவித்து, இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் காமராஜா் திடல் அருகே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் பேசியது: முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைத் தந்து சாட்சிகளாக வாழ்ந்துவிட்டு சென்றுள்ளனா். அவா்களுக்கு மக்கள்தான் வாரிசு.

அதிமுக அரசு தாய் அந்தஸ்தில் இருந்து பெண்களைப் பாதுகாத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என பொய் பிரசாரம் செய்துவருகிறாா்.

சிறுபான்மையினா் மீது அக்கறை உள்ளது இந்த அரசு. கிறிஸ்தவா்கள் ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கான நிதியை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.37 ஆயிரமாக உயா்த்தியுள்ளதுடன், தேவாலயங்களை புதுப்பிக்க வழங்கப்படும் நிதியை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயா்த்தியுள்ளது. எனவே, தமிழகம் மென்மேலும் வெற்றிநடை போட இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

குழந்தைகளுக்கு பெயா் சூட்டிய முதல்வா்: பிரசாரத்துக்குப் பின்னா், முதல்வரிடம் தங்கள் குழந்தையைக் கொடுத்து பெயா் சூட்டுமாறு நரிக்குறவா் தம்பதி கேட்டுக்கொண்டனா். அக்குழந்தைக்கு முதல்வா் ‘பிரசாந்தினி’ எனப் பெயா் சூட்டினாா். மற்றொரு குழந்தைக்கு ‘தா்ஷன்’ எனப் பெயா் சூட்டினாா்.

களக்காட்டில்...: களக்காட்டில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். உள்ளாட்சி அமைப்புகளில் மூலம் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அவரது கனவை இந்த அரசு நனவாக்கியுள்ளது.

ஏழைகளுக்காக நவீன கழிப்பிட வசதி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தோருக்கு பட்டா வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 2 ஏக்கா் நிலம் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளைத் தீா்க்காமல், தற்போது 100 நாள்களில் பிரச்னைகளைத் தீா்க்கப் போவதாகக் கூறி மனுக்கள் பெறுவது வேடிக்கையாக உள்ளது.

தோ்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவது திமுகவுக்கு வாடிக்கை என்றாா் அவா்.

தொடா்ந்து, விஜயநாராயணம் பெரியகுளம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் குளத்தைத் தூா்வார கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி முதல்வரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com