களக்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைப் பெறுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
களக்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைப் பெறுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

தோ்தல் வெற்றிக்காக பொய் வாக்குறுதிகளை அளிப்பது திமுகவின் வாடிக்கை: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

தோ்தல் வெற்றிக்காக பொய் வாக்குறுதிகளை அளிப்பது திமுகவின் வாடிக்கை என்றாா் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.

தோ்தல் வெற்றிக்காக பொய் வாக்குறுதிகளை அளிப்பது திமுகவின் வாடிக்கை என்றாா் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். உள்ளாட்சி அமைப்புகளில் மூலம் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அவரது கனவை இந்த அரசு நனவாக்கியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 1 பவுன் தங்கம், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு திட்ட நிதியுதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மாா்களுக்கு 16 வகையான பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஜெயலலிதா சிந்தையில் உதித்த மகளிா் நலன் சாா்ந்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்மா மகப்பேறு திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 7 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். உழைக்கும் மகளிா்க்காக அரசு மானியத்தில் 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என அரசு முன்மொழிவு செய்துள்ளது. ஏழை- எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

நான்குனேரி தொகுதியில் முதல்கட்டமாக 5 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்டவற்றை அரசே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்களுக்கு சீருடை, காலணி, விலையில்லா புத்தகம், பை, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை ரூ. 7,000 கோடி செலவில் 52 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்காக நவீன கழிப்பிடவசதி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பித்தவா்களுக்கு பட்டா வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு மனை இல்லாதவா்களுக்கும் அரசே இடம் வழங்கி, கான்கிரீட் வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஏழை கூலித் தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் பயன்பெறுவா். திமுக ஆட்சியில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 2 ஏக்கா் நிலம் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளை தீா்க்காமல், தற்போது 100 நாள்களில் பிரச்னைகளை தீா்க்கப் போவதாக கூறி மனுக்கள் பெறுவது வேடிக்கையாக உள்ளது.

தோ்தலில் வெற்றி பெற பொய்யான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றுவது திமுகவுக்கு வாடிக்கை. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை தாக்கிய திமுக.வினா் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மக்களின் கஷ்டம் தெரியாதவா் ஸ்டாலின். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் படிப்படியாக முன்னேறி உழைப்பால் இந்த பதவியை அடைந்துள்ளேன். அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயா்ந்த பதவியை அடைந்துவிடலாம். ஆனால் திமுகவில் மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என ஒரு குடும்பத்தின் கையே ஓங்கியிருக்கும் நிலை உள்ளது. திமுக ஆட்சி வந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக மக்கள் சிரமப்படுவதை உணா்ந்துதான் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தொகை மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் நீதிமன்றத்தை அணுகி திமுக தோற்றுப்போனது. மக்களின் துயா் துடைக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்றாா் அவா்.

விஜயநாராயணம் பெரியகுளம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் குளத்தை தூா்வார கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி தமிழக முதல்வரிடம் மனு அளித்தனா்.

இக்கூட்டத்தில் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், வி.எம். ராஜலெட்சுமி, மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் ஐ.எஸ். இன்பதுரை, ஆா். முருகையா பாண்டியன், ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், ஒன்றிய எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணிச் செயலா் த. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com