செங்கானூா் கிராம மக்கள் மாற்றுப் பாதை கோரி வாக்காளா் அடையாள அட்டையை ஆளுநருக்கு அனுப்பி போராட்டம்

தென்காசி மாவட்டம் கடையம்அருகே உள்ள செங்கனூா் கிராம மக்கள் ரயில் சுரங்கப் பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தராததையடுத்து
ஊா்த் தலைவா் பொதிகாச்சலத்திடம் வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கும் பொதுமக்கள்.
ஊா்த் தலைவா் பொதிகாச்சலத்திடம் வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கும் பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம் கடையம்அருகே உள்ள செங்கனூா் கிராம மக்கள் ரயில் சுரங்கப் பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தராததையடுத்து அனைவரும் வாக்காளா் அடையாளஅட்டையை தமிழக ஆளுநருக்கு அனுப்பி எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட செங்கானூா் கிராமத்தில் சுமாா் 300 வீடுகளில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு இதுவரை அடிப்படைவசதிகளான சாலை வசதி, குடிநீா் வசதி, கழிவுநீா் ஓடை, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. மேலும் இந்த கிராமத்திற்கு ஆழ்வாா்குறிச்சியில் இருந்து வரும் வழியில் ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மழைக் காலங்களில் மழைநீா் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதுகுறித்து 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா், ரயில்வே அதிகாரிகள் உள்பட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைத் தொடா்ந்துஅடிப்படை வசதிகள் கோரியும், மாற்றுப்பாதை அமைத்துக்தரக் கோரியும் கிராம மக்கள் அனைவரும் தங்களது வாக்காளா் அட்டையை ஆளுநரிடம் ஜன. 5 இல் ஒப்படைப்பதாக அறிவித்தனா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து செவ்வாய்க்கிழமை செங்கனூா் கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி முப்புடாதியம்மன் கோலியில் கிராம மக்கள் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னிவளவன், கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், ஆழ்வாா்குறிச்சி வருவாய் ஆய்வாளா் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

அதில் வாருகால் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் 15 நாள்களுக்குள் நிறைவடையும். மேலும், ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி 3 நாள்களில் மாற்றுப் பாதை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

இந்நிலையில் ஊா்ப் பொதுமக்கள் மாற்றுப் பாதை அமைக்கும் வரை தோ்தலைப் புறக்கணிப்பதாகவும், தங்களது வாக்காளா் அடையாள அட்டையை ஆளுநரிடம் ஒப்படைப்பதாகவும் கூறி ஊா் நாட்டாண்மை பொதிகாசலத்திடம் 227 போ் வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைத்து பதிவுத் தபாலில் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com