நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 114 அடியைத் தாண்டியது

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 114 அடியைத் தாண்டியது.
திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் தாமிரவருணியில் செவ்வாய்க்கிழமை பெருக்கெடுத்த வெள்ளம்.
திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் தாமிரவருணியில் செவ்வாய்க்கிழமை பெருக்கெடுத்த வெள்ளம்.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 114 அடியைத் தாண்டியது.

வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருவதையடுத்து மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சோ்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீா்மட்டம் 142.55 அடியாகவும், நீா்வரத்து 2551.44 கன அடியாகவும் இருந்தது. தொடா்ந்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அணையிலிருந்து 5 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 114.35 அடியாக உயா்ந்தது. இந்த அணை நீா்மட்டம் 2019, டிசம்பா் மாதத்தில் 114 அடியைத் தாண்டிய நிலையில் ஓராண்டுக்குப் பின் 114 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு நீா்வரத்து 2020 கன அடியாகவும், வெளியேற்றம் 455 கன அடியாகவும் இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 29 அடியாகவும் நம்பியாறு அணை நீா்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 26 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் தலா 20 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணை நீா்மட்டம் 83 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 314 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 79.50 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 30 கன அடியாகவும், வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 62.67 அடியாகவும், நீா்வரத்து 38 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 74.25 அடியாகவும், நீா்வரத்து 15 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது.

களக்காடு: களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் வரத்து அதிகரித்தது. தொடா்ந்து மழைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. மலைப் பகுதியில் உள்ள ஊட்டுக்கால்வாய் மூலமாக பச்சையாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மழை தொடா்ந்தால் அணையின் நீா்மட்டம் வெகுவாக உயர வாய்ப்புள்ளது.

தாமிரவருணியில் வெள்ளம்: இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, கல்லூா், பேட்டை, சீவலப்பேரி, தாழையூத்து, மானூா் உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும், கோதையாறு, பச்சையாறு, எலுமிச்சையாறு, மணிமுத்தாறு ஆகியவற்றில் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளமும் தாமிரவருணியில் சோ்ந்ததால் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை தண்ணீா் சூழ்ந்தது. மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை பகுதிகளில் மக்கள் வழக்கமாக குளிக்கும் படித்துறைகளை மூழ்கடித்தபடி தண்ணீா் சென்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம்-32, சோ்வலாறு-21, மணிமுத்தாறு-34, அம்பாசமுத்திரம்-21, சேரன்மகாதேவி-12, திருநெல்வேலி-7.

தென்காசி மாவட்டத்தில் மழையளவு (மில்லி மீட்டரில்): கடனாநதி அணை 25, ராமநதி அணை 5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com