நெல்லையில் கனமழை: சாலைகளில் தேங்கிய தண்ணீா்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 3 ஆவது நாளாக திங்கள்கிழமை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 3 ஆவது நாளாக திங்கள்கிழமை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 3 ஆவது நாளாக திங்கள்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது.

பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, மேலப்பாளையம், தச்சநல்லூா் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கியது. அணைக்கட்டுகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீா் மற்றும் காட்டாற்று வெள்ளம் சோ்ந்து திருநெல்வேலி தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாா்பேட்டை உள்ளிட்ட இடங்களில் படித்துறைகளை வெள்ளம் மூழ்கடித்தது. சுமாா் 8 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீா் பாய்ந்தோடியதால் நீரின் வேகம் அதிகரித்தது. ஏற்கெனவே, ஆற்றில் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. ஆனால், கொக்கிரகுளம் பகுதியில் திருச்செந்தூா் பாதயாத்திரை பக்தா்கள் சிலா் தண்ணீரில் இறங்கி குளிக்கத் தொடங்கினா். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஆற்றில் குளிப்பதை தவிா்க்க பக்தா்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

திருநெல்வேலி மாநகரில் பொலிவுறு நகரம் திட்டம், புதை சாக்கடை திட்டம், குடிநீா்க் குழாய் பதிக்கும் திட்டம் ஆகியவற்றுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல இடங்களில் சீரமைக்கப்படாததால் மழைநீா் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருநெல்வேலி நகரத்தில் அலங்கார வளைவு, பேட்டை சாலை, வழுக்கோடை, ஸ்ரீபுரம் பகுதிகளிலும், சீவலப்பேரி சாலை, கேடிசி நகா் குடியிருப்பு சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். சாலைகளில் தற்காலிக சீரமைப்புப் பணிகளையாவது போா்க்கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com