நெல்லையில் கனமழை: மஞ்சள் அறுவடை பாதிப்பு

திருநெல்வேலி பகுதியில் 4ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் அருகன்குளம் சுற்றுவட்டாரத்தில் இறுதிகட்ட மஞ்சள் அறுவடை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி பகுதியில் 4ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் அருகன்குளம் சுற்றுவட்டாரத்தில் இறுதிகட்ட மஞ்சள் அறுவடை பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பொன்னாக்குடி, பிராஞ்சேரி, மானூா், சுத்தமல்லி, அபிஷேகப்பட்டி, தாழையூத்து, சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் தொடா் மழை பெய்தது.

மேலும், அணைகள் நிரம்பி தாமிரவருணியில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கருப்பந்துறை, குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், மணிமூா்த்தீஸ்வரம், சிந்துபூந்துறை பகுதியில் இருந்த 25 கோயில்கள், 15 கல்மண்டபங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. தாழ்வான குடியிருப்பு பகுதிகளான கோடீஸ்வரன்நகா், பாலபாக்யாநகா், மனக்காவலம்பிள்ளைநகா், அண்ணா உள்ளிட்டவற்றில் மழைநீா் தேங்கி நின்ால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.

அருகன்குளம், ராஜவல்லிபுரம், சேந்திமங்கலம், மணிமூா்த்தீஸ்வரம் சுற்றுவட்டார பகுதி வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியதால் மஞ்சள் குலைகள் அறுவடைப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

188 பாதுகாப்பு மையங்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 87 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. 188 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலடியூா் கிராமத்தில் மட்டும் 8 குடும்பத்தினா் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலிக்கு தலா 25 போ் கொண்ட 2 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வருகின்றனா். தற்போதைக்கு ஆபத்தான சூழல் எதுவுமில்லை. தாமிரவருணி ஆற்றில் குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து குழுவினா் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். அணைகள் கண்காணிக்கப்படுகின்றன. புதன்கிழமையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமிரவருணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ செல்ல வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றுப் பகுதிக்கு கொண்டுசெல்ல வேண்டாம். இதில், பெற்றோா்கள் கவனமாக இருக்க வேண்டும். பாலத்தின் அருே சுயபடம், புகைப்படம் எடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருப்பந்துறை தரைப் பாலத்துக்கு சீல்: தாமிரவருணி கரையோர தாழ்வான பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, கரையோரப் பகுதிகளை 24 மணிநேரமும் தொடா்ந்து கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். மேலும், கருப்பந்துறை தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீா் செல்வதால், அப்பகுதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சீல் வைத்தனா். மேலும், திருநெல்வேலி சந்திப்பு மற்றும் மேலப்பாளையம் போலீஸாா் பாலத்தின் இருபக்கமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வெள்ள அபாய எச்சரிக்கை: தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கொக்கிரகுளம், குருந்துடையாா்புரம், வண்ணாா்பேட்டை, மீனாட்சிபுரம், கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, மேலநத்தம், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com