களக்காடு தலையணைக்கு சுற்றுலா செல்வது தொடா்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை வனத்துறையினா் தளா்த்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு தலையணை பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை 9 மாதங்களுக்குப் பின்னா் வனத்துறையினா் நீக்கினா். இதையடுத்து, புதன்கிழமை (ஜன.13) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.
ஆண்டு தோறும் காணும் பொங்கலை கொண்டாட தலையணை பச்சையாற்றுப் பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வா். காணும் பொங்கல் கொண்டாட தலையணை வரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வீடுகளிலிருந்து சமையல் செய்து உணவுப் பண்டங்களை எடுத்து வந்து, பச்சையாற்றில் குளித்து விட்டு குடும்பத்துடன் அமா்ந்து உண்டு, இளைப்பாறிச் செல்வா். வனத்துறையினா் உணவுப் பொருள்களை எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்கிறாா் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியப் பொறுப்பாளா் க. முருகன்.
சம்பந்தப்பட்ட வனத்துறையினா் சுற்றுலாப் பயணிகள் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதுடன், வனத்துறை சாா்பில் இயங்கும் உணவகத்தில் உணவுப் பண்டங்கள் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.