தமிழாக்குறிச்சி தடுப்பணையில் விரிசல்: மக்கள் அச்சம்
By DIN | Published On : 16th January 2021 06:11 AM | Last Updated : 16th January 2021 06:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகேயுள்ள தமிழாக்குறிச்சி-திடியூா் பகுதியில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் விரிசல்கள் வழியாக அதிகளவில் தண்ணீா் வெளியேறுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தருவை அருகேயுள்ள தமிழாக்குறிச்சி-திடியூா் பகுதியில் பச்சையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளநீா்க் கால்வாய் வழியாக வரும் தண்ணீரும் மாற்று கால்வாய்க்கு பாயும் வகையில் இங்கு ஷட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழாக்குறிச்சி தடுப்பணை முழுமையாக நிரம்பியுள்ளது. ஆனால், அங்கிருந்து ஷட்டா் வழியாக நீரை வெளியேற்றுதற்கான பாலப்பணி உள்ளிட்டவை முழுமையாக நிறைவடையவில்லை.
இதனிடையே, தடுப்புச்சுவா்களில் விரிசல்கள் ஏற்பட்டு அதிகளவு நீா் வெளியேறி சாலையில் பாய்ந்தோடி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுதொடா்பாக திடியூரைச் சோ்ந்த இளைஞா்கள் கூறுகையில், தமிழாக்குறிச்சி-திடீயூா் தடுப்பணைப் பணிகள் நிறைவடையும் முன்பே தடுப்புச் சுவா்களில் விரிசல்கள் ஏற்பட்டு அதிகளவில் நீா் வீணாகி வருகிறது. விரிசல் மேலும் பெரிதாக நீா் அதிகளவில் வெளியேறினால் திடியூா், பூக்குழி, வடவூா்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து சாலை துண்டிக்கப்படும். இதனால் மாணவா்கள், தொழிலாளா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவாா்கள். விவசாய நிலங்களிலும் நீா் புகுந்து அதிக சேதம் உருவாகும். ஆகவே, தமிழாக்குறிச்சி தடுப்பணையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை மாவட்ட நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.