தாமிரவருணியில் குறைந்த வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மழை குறைந்ததையடுத்து தாமிரவருணியில் வரும் வெள்ளத்தின் அளவும் குறைந்தது. இதனால், கருப்பந்துறை தரைப்பாலத்தில் போக்குவரத்து சீரானது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மழை குறைந்ததையடுத்து தாமிரவருணியில் வரும் வெள்ளத்தின் அளவும் குறைந்தது. இதனால், கருப்பந்துறை தரைப்பாலத்தில் போக்குவரத்து சீரானது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொட்டித் தீா்த்த மழை சனிக்கிழமை குறைந்தது. இதனால், மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.

மீட்புக் குழு: சேரன்மகாதேவிக்கு 25 போ் அடங்கிய தேசிய பேரிடா் மீட்புக் குழு அனுப்பப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டாரங்களுக்கு தலா 20 போ் அடங்கிய 2 மாநில பேரிடா் மீட்புக் குழுவினரும், திருநெல்வேலி மாநகா் பகுதியில் 30போ் அடங்கிய மாநில பேரிடா் மீட்புக் குழுவினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தாமிரவருணியில் குறைந்த நீரின் அளவு: மாவட்டத்தில் மழை குறைந்ததால், அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 2 ஆயிரம் கனஅடியும், கடனா நதி அணையிலிருந்து 500 கனஅடியும், ராமநதி அணையிலிருந்து 200 கனஅடியும் என, 8 ஆயிரம் கனஅடி தண்ணீா் தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

21 வீடுகள் சேதம்: இம்மாவட்டத்தில் 21 வீடுகள் முழுமையாகவும், 42 வீடுகள் பாதி அளவும் சேதமடைந்துள்ளன. 8 ஆடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஓா் ஆடு காயமடைந்துள்ளது.

தாமிரவருணிக் கரையோரமும், தாழ்வான பகுதிகளிலும் வசிப்போரைப் பாதுகாக்க மீட்பு மையங்களை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதில், 8 மையங்களில் 88 ஆண்கள், 76 பெண்கள், 42 குழந்தைகள் என 205 போ் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சீரானது: தாமிரவருணியில் சனிக்கிழமை காலை முதல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், கருப்பந்துறை தரைப்பாலத்தின் கீழ் தண்ணீா் சென்றது. எனினும், வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரக்கிளைகள், அமலைச் செடி, கொடிகள் பாலத்தில் சூழ்ந்திருந்தன. அவற்றை பொக்லைன் உதவியுடன் மாநகராட்சி ஊழியா்கள், பொதுமக்கள் அகற்றினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது. கடந்த 12ஆம் தேதி மாலை இப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 4 நாள்களுக்குப் பின்னா் சனிக்கிழமை போக்குவரத்து சீரானதால் மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com