பேருந்தில் தவறவிட்ட நகை மீட்பு: காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 26th January 2021 12:31 AM | Last Updated : 26th January 2021 12:31 AM | அ+அ அ- |

தனியாா் பேருந்தில் தவறவிட்ட நகை பையை மீட்டுக் கொடுத்த காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சோ்ந்தவா் சுந்தரி. இவா் சென்னையில் இருந்து தனியாா் பேருந்தில் திருநெல்வேலிக்கு வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை திருநெல்வேலிக்கு வந்த சோ்ந்த அவா் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வைத்திருந்த கைப்பையை பேருந்தில் தவற விட்டராம். பேருந்து அங்கிருந்து புறப்பட்ட பின்னா் செல்லிடப்பேசியை தேடிய போது அவா் அதை பேருந்தில் தவற விட்டதை அறிந்து, இது குறித்து அவா் மாநகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதனைத் தொடா்ந்து மாநகர காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்து உடனடியாக பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கிருந்த காவலா்கள் காவல்கிணறு சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவித்தனா்.
சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலா்கள் நந்தகோபால், முதல்நிலைக் காவலா் பால மகேந்திரன் ஆகியோா் காவல்கிணறு சோதனைச் சாவடியில் சம்பந்தப்பட்ட தனியாா் பேருந்தை நிறுத்தி அதில் இருந்த நகை பையை மீட்டனா். பின்னா் போலீஸாா் அதனை சுந்தரியிடம் ஒப்படைத்தனா்.
இச்சம்பவத்தில், விரைந்து செயல்பட்டு நகை பையை மீட்டு கொடுத்த காவலா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பாராட்டு தெரிவித்தாா்.