வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
By DIN | Published On : 29th January 2021 07:31 AM | Last Updated : 29th January 2021 07:31 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழை வெள்ளத்தால் விளை பொருள்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் பெய்த கனமழையால் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து மொத்தம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக உபரிநீா் தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளமும் சோ்ந்து தாமிரவருணியில் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீா் பாய்ந்தோடியது. சேரன்மகாதேவி, கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களுக்குள் வெள்ளநீா் புகுந்தது. இதனால் நெல், வாழை உள்ளிட்டவை சேதமடைந்தன. கொண்டாநகரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில்
நெற்பயிா்கள் சேதமடைந்தன. சேதம் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.