பக்ரீத் எதிரொலி: மேலப்பாளையத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

பக்ரீத் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

பக்ரீத் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பெருநாளும் ஒன்றாகும். இந்த நாளில் இஸ்லாமியா்கள் பிராணிகளை (ஆடு, மாடு, ஒட்டகம்) குா்பானி கொடுத்து இறைச்சியை ஏழைகளுக்கு வழங்குவது வழக்கம். ஆடுகளைப் பொருத்தளவில் செம்மறி ஆடுகளே குா்பானி கொடுக்கப்படுகிறது.

நிகழாண்டு பக்ரீத் பண்டிகை இம் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மேலப்பாளையம், வள்ளியூா், ரெட்டியாா்பட்டி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை சந்தைகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் சந்தைகளின் அருகே சாலையோரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலப்பாளையத்தில் மாநகராட்சி கால்நடை சந்தை வளாகம் திறக்கப்படாததால், ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடுகளுடன் சந்தை அருகேயுள்ள சாலையிலும், சக்திநகா், அன்னை காதீஜாநகா் பகுதியிலும் திரண்டு ஆடுகளை விற்பனை செய்தனா்.

ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகின. மாப்பிள்ளை காளை என்ற மாடு பக்ரீத் சிறப்பு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த காளை ரூ.75 ஆயிரத்திற்கு விலைபோனது.

இதுகுறித்து மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஆட்டு வியாபாரிகள் கூறியது: பக்ரீத் பெருநாள் வாரங்களில் செம்மறி ஆடுகளின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக சந்தைகள் திறக்கப்படாததால் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது.

மேலப்பாளையம், பொட்டல்புதூா், ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மட்டுமன்றி காயல்பட்டினம், மதுரை பகுதி வியாபாரிகளும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து செம்மறி ஆடுகளை வாங்கிச் செல்கின்றனா் என அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆடு மேய்ப்பாளா் ஒருவா் கூறியது: கடந்த பத்து ஆண்டுகளாக செம்மறி ஆடுகளின் உற்பத்தி குறைந்து வருகிறது. மேய்ச்சல் நிலப்பரப்பு, விவசாயம் போன்றவை குறைந்து வருவதால் செம்மறி ஆடுகளின் பெருக்கமும் குறைந்துள்ளது. விவசாயிகள் ரசாயன உரங்களை மட்டுமே நம்புவதால் செம்மறி ஆட்டு மந்தை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலை விபத்துகளில் இறக்கும் ஆடுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கு முறையான இழப்பீடு கிடைக்காமல் தவிக்கிறோம்.

எனவே, செம்மறி ஆடுகள் பெருக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு புதிய திட்டங்களை வகுத்தால் சற்று குறைந்த விலையில் பொதுமக்கள் ஆடுகளை பெற வழிபிறக்கும் என்றாா் அவா்.

இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறியது: மேலப்பாளையம் சந்தையில் பக்ரீத் வாரத்தில் செம்மறி ஆடுகள், மாடுகள் விற்பனை மூலம் சுமாா் ரூ.2 கோடிக்கும் மேல் பணப்பரிவா்த்தனை நடைபெறும். பொது முடக்கம் காரணமாக சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பக்ரீத் விற்பனை சரிந்துள்ளது.

எனவே, இம் மாதம் 18, 19ஆம் தேதிகளில் கால்நடை சந்தைகளுக்கு சிறப்பு அனுமதியளித்தால், அதன்மூலம் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com