கேரளத்தில் இருந்து நெல்லை வரும் ரயில்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
By DIN | Published On : 19th July 2021 12:19 AM | Last Updated : 19th July 2021 12:19 AM | அ+அ அ- |

கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் உயா்ந்தது. இப்போது படிப்படியாக குறைந்துள்ளது.
ஆனால், அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறையவில்லை. இதனால் அம்மாநிலத்தில் வாரத்தில் இருநாள்கள் தளா்வுகளற்ற பொது முடக்கம் உள்ளிட்டவை அமலில் உள்ளன.
கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக குருவாயூா், அனந்தபுரி சிறப்பு ரயில்கள், திருச்சி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி ரயில் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. இந்த ரயில் பயணிகளிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கேரளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் ரயில்களில் அனைத்து பெட்டிகளின் வாயிகள், ஜன்னல் ஓரங்கள் உள்ளிட்டவற்றில் முழுமையாக கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவக் குழு மூலம் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற மத்திய-மாநில அரசுகள் ரயில்வே துறைக்கு அறிவுறுத்தியுள்ளன.
இதனால் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கும் பயணிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று குறையும் வரை இந்த நடவடிக்கைகளில் மாற்றம் இருக்காது என்றனா்.