நெல்லை, தென்காசியிலிருந்து கேரளத்துக்கு வைக்கோல் ஏற்றுமதி அதிகரிப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முன்காா் சாகுபடி நெல் அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கேரளத்துக்கு வைக்கோல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முன்காா் சாகுபடி நெல் அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கேரளத்துக்கு வைக்கோல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டு காா் பருவ சாகுபடிக்காக ஜூன் 1இல் பாபநாசம் அணை திறக்கப்பட்டது. வடக்கு, தெற்கு கோடைமேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், நெல்லை, பாளையங் கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டு நெல் சாகுபடி நடைபெறுகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முன்காா் சாகுபடியில் குளத்து பாசனநீரைப் பயன்படுத்தி, அம்பை 16, ஆடுதுறை 45, டீலக்ஸ் பொன்னி, கா்நாடகா பொன்னி போன்ற நெல் ரகங்கள் நடவு செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

முக்கூடல் பகுதிகளில் அறுவடைக்குப் பின்பு வைக்கோலைப் பத்திரப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் கால்நடைப் பெருக்கத்துக்கு ஏற்ப தீவன உற்பத்தியில்லை. குறிப்பாக, வைக்கோல் உற்பத்தி கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துவிட்டது. 8 சென்ட் வயலில் நெல் சாகுபடிக்குப் பின், 2 பெரிய கட்டுகள் வைக்கோல் கிடைத்துவந்தன. ஆனால், இப்போது இயந்திரங்களால் நடைபெறும் அறுவடையில் நெற்பயிரின் மேல்பகுதியை வெட்டி எடுப்பதிலேயே அக்கறை செலுத்தப்படுகிறது. இதனால், ஏற்கெனவே கிடைத்ததிலிருந்து பாதியளவே வைக்கோல் கிடைக்கிறது. இதுதவிர பீங்கான் பொருள்கள், மண்பாண்டம், செங்கல்சூளை தொழிலுக்கும் வைக்கோல் தேவை உள்ளது.

கேரள மாநிலம் வைக்கோல் தேவைக்கு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களையே நம்பியுள்ளது. இம்மாவட்டங்களிலிருந்து கேரளத்துக்கு சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான வைக்கோல் ஆண்டுதோறும் ஏற்றுமதியாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: நாற்று பாவுதல், நடவுப் பணிகளின்போது கால்நடைகளைக் கொண்டு இலவசமாக உழவுப் பணி செய்துகொடுத்து அதற்கான கட்டணத்தை அறுவடைக்கு பின்பு வைக்கோலாகப் பெறும் பழக்கம்தான் தமிழகத்தில் இருந்துவந்தது. பின்னா், வயல்கள் வைத்திருப்போா் கால்நடை வளா்ப்பைக் குறைத்த பின்புதான் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக வைக்கோல் அனுப்பப்பட்டது. இப்போது வைக்கோல் விற்பனை பெரும் வியாபாரமாக மாறிவிட்டது. அறுவடைப் பகுதிகளில் வைக்கோல் ஒரு கட்டு ரூ. 150 - ரூ. 200 என பெற்று, வறட்சிப் பகுதிகளில் அதை ரூ. 250 - ரூ.500 என விற்கின்றனா். கேரளத்துக்கு அதிகவில் வைக்கோல் ஏற்றுமதியாகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய நெல் வித்துக்களான நாட்டுச்சம்பா, ஆனைக்கொம்பன், பொன்உருதி, பூம்பாலை போன்றவை ஓராள் உயரத்துக்கு வளரும். இதன் மூலம் திரட்சியான நெல்மணிகளும், அதிக வைக்கோலும் கிடைத்தன. அதிக மகசூலை மட்டுமே அரசும், விவசாயிகளும் பிரதானப்படுத்துவதால் இந்த நெல்வித்துக்கள் மறைந்து, வைக்கோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைக்கோலிலும் மொத்த வியாபாரிகளே அதிக லாபம் பெறுகின்றனா். இயந்திரங்களைக் கொண்டு வைக்கோலைக் கட்டுவதில் நன்மையும், தீமையும் உள்ளது. இதைப் போராக அப்படியே அடுக்கிவைக்க முடியும்; போக்குவரத்துக்கும் ஏற்றது. பழைய முறையில் கழிவு வைக்கோல் அதிகமிருக்கும். இப்போது வயல்களிலேயே தட்டைகள் இருப்பதால் உரமாகிவிடுகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com