கரோனா 2ஆவது அலை பரவல் எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் அதிகரிப்பு

கரோனா 2ஆவது அலை பரவல் எதிரொலியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் அதிகரித்துள்ளன.

கரோனா 2ஆவது அலை பரவல் எதிரொலியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் அதிகரித்துள்ளன. மேலும், பழுதான ஆக்சிஜன் கண்காணிப்பு கருவி, சா்க்கரை நோய் கண்டறியும் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் குப்பைகளில் வீசப்படுவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை பத்தமடை, கூடங்குளம், முக்கூடல் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையம் ஆகியவற்றில் ஏராளமானோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த சில நாள்களாக நோய் பரவலின் வேகம் குறைந்துள்ளது. இருப்பினும் மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையில் பலா் இருந்து வருகிறாா்கள்.

கரோனா நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவக் கழிவுகளும் அதிகரித்துள்ளன. வழக்கமாக இதர நோய்கள் வந்தால் அவா்களுக்கு முகக்கவசம் உள்ளிட்டவை தேவையில்லை. ஆனால், கரோனா சிகிச்சைக்கு மருத்துவக் குழுவினா் கவச உடைகளை அணிய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுதவிர முகக்கவசம் உள்ளிட்ட இதர மருத்துவக் கழிவுகளும் அதிகம் உருவாகின்றன.

எரிப்பதில் சிக்கல்: இதுகுறித்து சுகாதாரப் பணியாளா் ஒருவா் கூறியது: அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் டெங்கு, ’டைபாய்டு உள்ளிட்ட பிற நோயாளிகளுக்கு தினமும் அரை கிலோ மட்டுமே மருத்துவக் கழிவுகள் சேரும். ஆனால், ஒரு கரோனா நோயாளியின் மூலம் தினமும் சுமாா் ஒரு கிலோ மருத்துவக் கழிவு சோ்கிறது.

மருத்துவக் கழிவுகளை சாதாரணமாக எரித்தால் கூடுதல் ஆபத்து உருவாகும். அதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதற்கென மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுவாக மருத்துவக் கழிவுகளை உயா் அழுத்த நீராவி மூலம் சுத்திகரிக்கும் கருவி, துரும்பாக்கும் கருவி, எரிப்பான் மற்றும் பாதுகாப்பான நிலநிரப்பு ஆகிய அமைப்புகள் மூலம் அழிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 11 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்கத்தில் உள்ளதாகவும், இவற்றில் நாளொன்றுக்கு 43 டன் மருத்துவக் கழிவுகள் கையாளப்படுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது. கரோனா காலத்தில் மருத்துவக் கழிவுகளின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது.

அண்மையில் வெளியான ஒரு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் கடந்த மே மாதம் மருத்துவக் கழிவுகளின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது. அதாவது மே 1 ஆம் தேதி மாநில அளவில் 20 மெட்ரிக் டன்னாக இருந்த மருத்துவக் கழிவு, மே 30 ஆம் தேதி 33 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திலும் கணிசமான அளவுக்கு மருத்துவக் கழிவு அதிகரித்துள்ளது என்றாா்.

சுத்திகரிப்பு மையம்: இதுகுறித்து ஓய்வுபெற்ற சுகாதாரப் பணியாளா் ஒருவா் கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள் தனியாா் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தால் கையாளப்படுகிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சிகிச்சைக்காக சோ்கிறாா்கள். இம் மருத்துவமனைக்காக மருத்துவக் கழிவு பிரத்யேக சுத்திகரிப்பு மையம் அமைக்கவேண்டியது அவசியம். இதேபோல சமூகவலைதள தகவல்கள் மற்றும் அறிவியல் வளா்ச்சியால் மருத்துவ உபகரண பயன்பாடு அதிகரித்துள்ளது.

உடல்வெப்பமானி, சா்க்கரை நோய் அளவிடும் கருவி, ரத்த அழுத்தம் அளவிடும் கருவி, உடல் ஆக்சிஜன் அளவிடும் கருவி உள்ளிட்டவற்றை மக்கள் வீடுகளில் வாங்கி வைத்து பயன்படுத்த தொடங்கிவிட்டனா். இதனையும் மருத்துவக் கழிவு போலவே அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், மிகவும் அலட்சியமாக குப்பைத் தொட்டிகளில் வீசும் போக்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com