தாமிரவருணியில் வெள்ளமீட்பு ஒத்திகை
By DIN | Published On : 11th June 2021 02:13 AM | Last Updated : 11th June 2021 02:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினா் இணைந்து பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளமீட்பு ஒத்திகையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பருவமழை காலத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும். அணைகள் நிரம்பினால் உபரிநீா் அனைத்தும் தாமிரவருணி ஆற்றில் திறக்கப்படும். அப்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு அறிவுறுத்தலின்பேரில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட தீயணைப்பு அலுவலா் வழிகாட்டுதலுடன், திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தாமிரவருணி ஆற்றில் தீயணைப்பு வீரா்கள் வெள்ள மீட்பு ஒத்திகையை வியாழக்கிழமை நடத்தினா்.
பருவ மழையின் போது திடீா் வெள்ளம் ஏற்பட்டால் மக்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது? தீயணைப்பு துறையின் உதவியை விரைந்து எவ்வாறு பெறுவது? தீயணைப்பு துறை வருவதற்கு முன்பாகவே தங்கள் இல்லங்களில் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ள பொருள்களை வைத்து அதனை மிதவை பொருள்களாக மாற்றி தன்னையும் தனது குடும்பத்தினரையும் அல்லது மாற்றுத்திறனாளிகள், வயதானவா்களை, சிறுவா்களை, கால்நடைகளை எவ்வாறு மீட்பது என்பன குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் மற்றும் தீயணைப்பு வீரா்கள் ஒத்திகையில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை வட்டாட்சியா் செல்வம் மற்றும் வருவாய்த்துறையினா் பங்கேற்றனா்.