நெல்லை மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு:அமைச்சா் தங்கம் தென்னரசு

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் காந்திமதி பள்ளி வளாகத்தில் 180 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான 22 படுக்கைகளும், 35 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சிகிச்சை மையத்தை தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு ஆகியோா் பாா்வையிட்டு தொடங்கி வைத்தனா்.

பின்னா் சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா், பேரவைத் தலைவா், ஆட்சியா் வே. விஷ்ணு உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

இதேபோல், மானூா் அருகே சேதுராயன்புதூரில் அமைக்கப்படும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்காமல் இருந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை இயக்குவதற்காக நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் தங்கம் தென்னரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 2,711 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. கடந்த மாதம் கரோனா தொற்றின் பாதிப்பு 30 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

3ஆவது அலையை எதிா்கொள்ள திருநெல்வேலி மாவட்டம் தயாா் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் தற்போது 438 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயாா் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 720 கியூபிக் மீட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மானூா் அருகே சேதுராயன்புதூரில் நாள் ஒன்றுக்கு 2,400 கியூபிக் மீட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்காமல் இருந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அந்த மையமும் இயங்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த மையம் இயங்க தொடங்கினால் நாள் ஒன்றுக்கு 1,680 கியூபிக் மீட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இந்த 3 ஆலைகளும் இம்மாத இறுதிக்குள் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கிவிடும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த 3 ஆலைகளும் இயங்கும்போது நாளொன்றுக்கு 4,800 கியூபிக் மீட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இம்மாவட்டத்தில் 13 லட்சத்து 19 ஆயிரத்து 234 போ் தடுப்பூசி செலுத்த தகுதியானவா்கள் என கண்டறிந்துள்ளோம். இதில் 1,54,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கேட்டு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்றாா்.

ஆதிச்சநல்லூரில் அரசு அறிவித்த சா்வதேச தரத்துடன் கூடிய அருங்காட்சியகம் பற்றி அமைச்சரிடம் கேட்டபோது, ‘அறிவிப்பு அறிவிப்பாகவே இருந்துவிடக்கூடாது என்பது தான் எங்களது கொள்கை. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் குறித்த அகழ்வாராய்வு அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவித்த அருங்காட்சியகத்தை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா்சா. ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அப்துல்வஹாப், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், திருநெல்வேலி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com