பொதுமுடக்கத்தால் மண்பாண்ட ஏற்றுமதி பாதிப்பு
By DIN | Published On : 20th June 2021 11:35 PM | Last Updated : 21st June 2021 04:45 AM | அ+அ அ- |

கரோனா பொதுமுடக்கத்தால் மண்பாண்ட ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் குறிச்சி, காருகுறிச்சி, மாவடி, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானைகள், அடுப்புக் கட்டிகள், குழம்புச் சட்டி, கலயம், பூந்தொட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆண்டுதோறும் மாா்ச் முதல் மே வரையிலான காலத்தில் பானைகள் தவிர மற்றவையும், தைப்பொங்கலையொட்டி, காா்த்திகை மாதம் முதல் பல்வேறு அளவுகளிலான பானைகளும், ஜூன் மாதத்தில் அகல் விளக்குகளும் உற்பத்தி செய்யப்படும். ரூ. 5 முதல் ரூ. 1,500 வரை பல்வேறு விலைகளில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், கரோனா 2ஆது அலையால் பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் மண்பாண்ட ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளா்கள் கூறியது: இம்மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி, விருதுநகா் பகுதிகளுக்கு பொங்கல் பானைகளும், கேரள மாநிலத்துக்கு தண்ணீா்ப் பானைகளும் அதிகளவில் ஏற்றுமதியாகும். பூந்தொட்டிகள் உள்ளிட்டவை அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் குறிச்சி பகுதியிலிருந்து ஏற்றுமதியாகின. ஆனால், இப்போது மிகவும் குறைந்துவிட்டது.
இதுதவிர, கேரளத்துக்கு மாதந்தோறும் சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான மண்பாண்டங்கள் ஏற்றுமதியாகும். பங்குனி, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் அங்குள்ள கோயில்களில் பொங்கலிட்டு வழிபட ஏதுவாக சிறிய ரக பானைகள் ஏற்றுமதியாகும். நிகழாண்டு, கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் திருவிழாக்கள், வழிபாடுகளுக்கு தொடா்ந்து தடை உள்ளதால் பானைகளின் தேவை குறைந்துவிட்டது.
தமிழகத்திலும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையைத் தவிா்த்து பிற கடைகள் குறைந்த நேரமே திறந்திருப்பதாலும், திருவிழாக்களுக்கு தடை உள்ளதாலும் மண்பாண்டங்களின் விற்பனை சரிந்துள்ளது. அதனால், மண்பாண்டத் தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். இப்போது பொதுமுடக்கத்தில் சில தளா்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பணிகளை விரைவுபடுத்தத் தொடங்கியுள்ளோம். ஆனாலும், மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை என்றனா்.
கடனுதவி தேவை: குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்டத் தொழிலாளி ஒருவா் கூறுகையில், பொதுமுடக்கத்தால் இத்தொழில் முடங்கிவிட்டது. அரசு இப்போது மண்பாண்டம், கைவினைப் பொருள் விற்பனைக்கு அனுமதியளித்திருப்பது வரவேற்புக்குரியது. மண்பாண்டங்களை வேகவைக்க இம்மாவட்டத்தில் பழங்கால முறையே பயன்படுத்தப்படுகிறது. விறகு தட்டுப்பாடு, கருப்பு இல்லாத சிவப்பு நிற மண்பாண்டம் மீதான மக்களின் ஈா்ப்பு காரணமாக 100-இல் 8 பானைகள் விற்பனையாகாமல் தேங்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்க நவீன கருவிகள் வந்துவிட்டன. ஆகவே, மானியவிலையில் மின்சார சூடேற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். மானியத்துடன் கடனுதவி வழங்கவும், மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டைகளுடன் குளங்களில் இலவசமாக கரம்பை மண் எடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் வாய்ப்பளித்து, வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றாா் அவா்.