சாயா்புரத்தில் வாகனச் சோதனை: ஆயுதங்கள் பறிமுதல்; இளைஞா் கைது
By DIN | Published On : 22nd June 2021 01:31 AM | Last Updated : 22nd June 2021 01:31 AM | அ+அ அ- |

சாயா்புரத்தில் இளைஞரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பாா்வையிடுகிறாா் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாா் .
ஸ்ரீவைகுண்டம்: சாயா்புரம் அருகே சட்ட விரோதமாக 4 மான் கொம்பு, வீச்சு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
சாயா்புரம் தனியாா் கல்லூரி முன்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவத்தையாபுரம் சாமிகோயில் தெரு காளிமுத்து மகன் ஆனந்த சேகரை (38) சோதனை செய்ததில், அவரது பைக்கில் 1 மான் கொம்பு, 1 கத்தி, 1 மற்றும் வீச்சு அரிவாள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீஸாா் அவரைக் கைது செய்து, மான் கொம்பு மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா்.
இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் ஆனந்த சேகா் வீட்டில் சோதனையிட்டதில், மேலும் 3 பெரிய வீச்சு அரிவாள், 1 அரிவாள், 3 பெரிய கத்தி, 3 மான் கொம்பு மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சாயா்புரம் காவல் நிலைய போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் சாயா்புரம் காவல் நிலையத்திற்கு வந்து ஆனந்த சேகரின் பைக் மற்றும் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பாா்வையிட்டு விசாரணை செய்தாா்.