தனியாா் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு
By DIN | Published On : 22nd June 2021 01:27 AM | Last Updated : 22nd June 2021 01:27 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த விவசாயிகள்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியாா் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, தூத்துக்குடி அருகேயுள்ள மேல தட்டப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 7 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் வி. குணசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தூத்துக்குடி அருகேயுள்ள அல்லிக்குளம், தெற்கு சிலுக்கன்பட்டி, பேரூரணி, ராமசாமிபுரம், மேலதட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள ஏறத்தாழ 2, 200 ஏக்கா் நிலங்களை சிப்காட் மூலமாக கையகப்படுத்தி தனியாா் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைக்கு வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனா். மேற்கண்ட பகுதிகளிலுள்ள மானாவாரி புஞ்சை நிலங்கள் தான் தங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மேலும், அந்தப் பகுதியிலுள்ள கொம்பாடி ஓடை, குறிஞ்சான் ஓடைகள் பல கிளைகளாக பிரிந்து புதுக்கோட்டை புறவழிச்சாலை பாலம் அருகேயுள்ள உப்பாற்று ஓடை வழியாக கோரம்பள்ளம்
குளம், பெட்டை குளம், அத்திமரப்பட்டி குளம், நம்பிக்கை மீண்டான் குளங்களுக்கு சென்று சேருகிறது.
தற்போது அமையவிருக்கும் தனியாா் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது இந்த உப்பாற்று ஓடையின் இருபுறமும் 5 கிலோமீட்டா் தொலைவில் அமைய விருப்பதாக தெரிகிறது. அந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அதில் இருந்து வெளியாகும் கழிவுகள் உப்பாற்று ஓடையில் கலந்து குடிநீா் மற்றும் விவசாயத்தை பாதிக்கும். எனவே, எண்ணெய் சுத்திகரிப்பு தெழிற்சாலையை அந்த இடத்தில் அமையவிருப்பதை தடை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீா் இணைப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் கண்ணன் தலைமையில் ஊா் பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: புதுக்கோட்டை அருகேயுள்ள வா்த்தகரெட்டிபட்டியில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில், எங்களது ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கிடும் பொருட்டு வீடுகள் தோறும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு பகுதியிலுள்ள வீடுகளுக்கு மட்டும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு மட்டும் இதுவரை குடிநீா் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மக்களின் வீடுகளுக்கும் பாகுபாடின்றி குடிநீா் இணைப்புகளை வழங்கிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களை திறக்க அனுமதி: அகில பாரத இந்து சேனை தமிழக அமைப்பு தலைவா் மாலையப்பன் மாவட்ட ஆட்சியா் அலுவலக்தில் அளித்த மனு: கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, கோயில்களையும் பக்தா்களின் தரிசனத்திற்காக திறக்கவேண்டும், முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.