பெட்ரோல், டீசல் விலை உயா்வு:போராட்ட நடத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு
By DIN | Published On : 22nd June 2021 01:18 AM | Last Updated : 22nd June 2021 01:18 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள்கள் தொடா் போராட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற
ஆலோசனைக் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.எஸ்.அா்ஜுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்து பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் மாநகா் மாவட்டச் செயலா் அகமது இக்பால், தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் தா.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் பி.ஞானசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், அதன் மீதான கலால் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாவட்டத்தில் ஜூன் 28இல் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஜூன் 29இல் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஜூன் 30இல் ஏரல், திருச்செந்தூா் ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது என மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் தெரிவித்தாா்.