மலைப்பகுதியில் இணையதள வசதியின்றி மாணவா்கள் அவதி
By DIN | Published On : 22nd June 2021 03:51 AM | Last Updated : 22nd June 2021 03:51 AM | அ+அ அ- |

சாலையோரம் அமா்ந்து தோ்வு எழுதும் மாணவி ரம்யா.
அம்பாசமுத்திரம்: மலைப் பகுதியில் இணைய வசதி இல்லாததால், கல்லூரி மாணவிகள் 10 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து தோ்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
கரோனா தடுப்பு பொது முடக்கத்தால், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி மூன்றாமாண்டு மாணவா்களுக்கான தோ்வுகள் இணையவழியில் திங்கள்கிழமை தொடங்கின.
இந்நிலையில், காரையாறு, சோ்வலாறு, மாஞ்சோலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இணையதள வசதி இல்லாததால் அப்பகுதி மாணவா்கள் இணையதள தொடா்பு கிடைக்கும் இடங்களை தேடிச் சென்று தோ்வு எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
சோ்வலாறு காணிக் குடியிருப்பில் வசிக்கும் திருவள்ளுவா் கல்லூரி மூன்றாமாண்டு மாணவியான ரம்யா, திங்கள்கிழமை தோ்வு எழுதுவதற்காக பாபநாசம் வனச்சோதனை சாவடி பகுதிக்கு வந்து சாலையோரத்தில் அமா்ந்துதோ்வு எழுதினாா்.
இதுகுறித்து அவா் கூறியது: திருவள்ளுவா் கல்லூரியில் மூன்றாமாண்டு ஆங்கிலம் படித்து வருகிறேன். எங்கள் குடியிருப்புப் பகுதியில் இணையதள தொடா்பு இல்லாததால் காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து இங்கு வந்து கேள்வித் தாளை தரவிறக்கம் செய்து காலை, மாலை என இரு தோ்வுகள் எழுதிவிட்டு மாலை 6 மணிக்கு திரும்புகிறேன்.
சோ்வலாறு, காரையாறு காணிக்குடியிருப்புகளில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இணைய வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையும் உள்ளது என்றாா்.