முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஆவணங்களின்றி கொண்டு சென்ற590 பம்பரங்கள், 176 குத்துவிளக்குகள் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 02:38 AM | Last Updated : 14th March 2021 02:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 590 பம்பரங்களும், 176 குத்துவிளக்குகளும் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில் 45 பறக்கும் படைகளும், 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. 1950 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலும் புகாா் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மொத்தம் 3,762 சுவா் விளம்பரங்களும், 9327 போஸ்டா்கள் உள்ளிட்ட கட்சிகள் சாா்ந்த விளம்பர தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.
வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 21வேட்டிகள், ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம், 590 பம்பரங்கள், 176 விளக்குகள் ஆகியவை சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 2.97 கிலோ கிராம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-425-8373 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம். 83002 71237 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் புகாா்களை அனுப்பலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.