முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்:ராதாபுரம் அதிமுக வேட்பாளா் இன்பதுரை
By DIN | Published On : 14th March 2021 02:40 AM | Last Updated : 14th March 2021 02:40 AM | அ+அ அ- |

வள்ளியூரில் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரைக்கு வரவேற்பளித்த அக்கட்சியினா்.
கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கப்போகிறேன் என்றாா், ராதாபுரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை.
இத்தொகுதியில் ஐ.எஸ். இன்பதுரை 2ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். சென்னையிலிருந்து சனிக்கிழமை வள்ளியூருக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கப்போகிறேன். ராதாபுரம் தொகுதியை ‘நம்பா் ஒன்’ தொகுதியாகக் கொண்டு வந்திருக்கிறோம். வருங்காலத்தில் முன்மாதிரித் தொகுதியாக்குவோம்.
50 ஆண்டுகால கோரிக்கையான ராதாபுரத்தில் நீதிமன்றம், 30 ஆண்டுகால கோரிக்கையான திசையன்விளை தனித் தாலுகா, வள்ளியூா் கல்வி மாவட்டம், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட நதிநீா் இணைப்புத் திட்டம் 4ஆம் கட்டப் பணி நடைபெற்றுவருகிறது.
குமரி மாவட்டத்தில் பழையாற்று நீரை பம்பிங் மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டுவர ரூ. 160 கோடியில் புதிய திட்டம், அருவிக்கரையில் மீன்பிடிப் படகு இறங்குதளம், 2 மனோ கல்லூரிக்குக் கட்டடங்கள், பணகுடி மேம்பாலம் இவற்றுடன் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
குமரி மாவட்டத்தில் அமைக்கப்படும் துறைமுகத்துக்குத் தேவையான சரக்குப் பெட்டக முனையத்தை ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையில் அமைக்கவுள்ளோம். இதனால் இங்கு அதிக தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு ஏற்படும். விமான நிலையம், வள்ளியூா்-திசையன்விளை-திருச்செந்தூா் புதிய ரயில் பாதை, திசையன்விளை, வள்ளியூா் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்தும் திட்டம், குத்தரபாஞ்சான் அருவியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் உள்ளன.
கூடங்குளம் போராட்டக்காரா்கள் மீதான வழக்குகளில் பெரும்பாலானவை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. கொடுங்குற்ற வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளன. அவையும் தொடா்புடையோரிடம் பேசித் தீா்த்துவைக்கப்படும்.
ராதாபுரம் தொகுதி தற்போது அமைதிப்பூங்காவாக உள்ளது. கொடுமுடி அணை நீா் கொள்ளளவை அதிகரிக்கவும், வள்ளியூா், பணகுடி, திசையன்விளை உள்பட 8 பேரூராட்சிகளுக்கு தனிக் குடிநீா்த் திட்டம் உருவாக்கவும் ஆய்வுப் பணி நடந்து வருகிறது. கருங்குளம் நீா்த்தேக்கத் திட்டம் குறித்தும் பேசிவருகிறேன். இவற்றையெல்லாம் வரும் ஆட்சியில் நிறைவேற்றுவேன். 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றாா் அவா்.
முன்னதாக, அவரை ஒன்றியச் செயலா்கள் இ. அழகானந்தம் (வள்ளியூா்) அந்தோணி அமலராஜா (ராதாபுரம்), நான்குனேரி, ராதாபுரம் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், மாவட்ட மகளிரணி துணைச் செயலா் ஞானபுனிதா, வள்ளியூா் நகரச் செயலா் பொன்னரசு, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சண்முகபாண்டி, இணைச் செயலா் எட்வா்ட் சிங், செழியன், தெற்குகள்ளிகுளம் அருண்புனிதன், ராஜன், ஜோசப், புனிதன், பாஜக மாவட்டத் தலைவா் மகராஜன், பொதுச்செயலா் எஸ்.பி. தமிழ்செல்வன், வழக்குரைஞா் ராம்நாத் அய்யா், குமாரமுருகன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
பின்னா், காமராஜா், அம்பேத்கா், சுபாஷ்சந்திரபோஸ், முத்துராமலிங்கத்தேவா் சிலைகளுக்கு ஐ.எஸ். இன்பதுரை மாலை அணிவித்தாா். இதையடுத்து, அவரை கட்சியினா் மேளதாளம் முழங்க கட்சியின் தோ்தல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.