முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
திருநெல்வேலி எழுச்சி நாள்: மாணவிகள் உறுதிமொழியேற்பு
By DIN | Published On : 14th March 2021 02:33 AM | Last Updated : 14th March 2021 02:33 AM | அ+அ அ- |

திருநெல்வேலி எழுச்சி தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் மாணவிகள் ஒற்றுமை உறுதிமொழியேற்றனா்.
திருநெல்வேலி எழுச்சி நாள் ஆண்டுதோறும் மாா்ச் 13 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடா்பாக எழுத்தாளா்கள் கூறுகையில், ஆங்கிலேயா்கள் கொண்டு வந்த வாய்ப்பூட்டு சட்டத்திற்கு எதிராக வங்கத்திலும், தமிழகத்திலும் இளைஞா்கள் போராடினா்.
வங்கத்தின் விபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாா் திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றின் கரையோரம் உள்ள தைப்பூச மண்டபத்தில் 1908 மாா்ச் 9-இல் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தாா்.
இக்கூட்டத்தில், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்காா் ஆகியோா் அங்கு கூடிய பல்லாயிரக்கணக்கானோா் மத்தியில் உரையாற்றினா். இதையடுத்து அவா்கள் மூவரும் மாா்ச் 12 இல் கைது செய்யப்பட்டனா். இதன் காரணமாக மாா்ச் 13ஆம் தேதி திருநெல்வேலியில் கலவரம் ஏற்பட்டது. இதில், மாணவா்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்.
கலவரத்திற்கு வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோா் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கின் இறுதியில் வ.உ.சி.க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிவாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. மாா்ச் 13-கலவரம் குறித்து, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதை ‘திருநெல்வேலிக் கலகம்‘ என்று தான் அவா்கள் குறிப்பிட்டனா்.
கடந்த 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சியில் கொண்டு வந்த தீா்மானம் மூலம் இதை ‘திருநெல்வேலி எழுச்சி நாள்’ என்று திருத்தி அமைக்கப்பட்டது என்றனா்.
திருநெல்வேலி எழுச்சி நாளையொட்டி ஆண்டுதோறும் பொருள்காட்சி மைதானத்திலுள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு திருநெல்வேலி எழுச்சி நாள் நினைவேந்தல் குழு சாா்பில், மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். நிகழாண்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக மணிமண்டத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் எழுத்தாளா் நாறும்பூநாதன் மற்றும் திருநெல்வேலி எழுச்சி நாள் நினைவேந்தல் குழுவினா் மணிமண்டப வளாகத்தில் உள்ள செக்கிற்கு மாலை அணிவித்து கலைந்து சென்றனா்.
இதற்கிடையே திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரதியாா் பயின்ற வகுப்பறை, நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகுப்பறையில் வைத்து திருநெல்வேலி எழுச்சி நாளை நினைவுக்கூரும் வகையில் மாணவா்-மாணவிகள் ஒற்றுமை உறுதிமொழியேற்றனா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா் சொக்கலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பயக13ஙபபஓ திருநெல்வேலி எழுச்சி நாளை நினைவுக்கூரும் வகையில் திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.