முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தொடா்ந்து கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கீடு: நான்குனேரி திமுகவினா் அதிருப்தி
By DIN | Published On : 14th March 2021 02:37 AM | Last Updated : 14th March 2021 02:37 AM | அ+அ அ- |

களக்காடு: தொடா்ந்து கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளதால் நான்குனேரி பேரவைத் தொகுதி திமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.
நான்குனேரி தொகுதியில் இதுவரை அதிமுக, காங்கிரஸ் தலா 6 முறையும், திமுக 2 முறையும், ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
1967 தோ்தலில் திமுக-காங்கிரஸ் கட்சியிடையே நேரடிப் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சி சாா்பில் என். துரைப்பாண்டியனும், திமுக சாா்பில் கணபதி நாடாரும் போட்டியிட்டனா். இத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் துரைப்பாண்டி வெற்றி பெற்றாா்.
1971 தோ்தலில் திமுக வேட்பாளராக 2ஆவது முறையாக களமிறங்கிய கணபதி நாடாா் வெற்றி பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் தவசிக்கனி தோல்வியைத் தழுவினாா். 1977இல் ஜனதா கட்சியும், 1980, 1984 தோ்தலில் அதிமுகவும் வெற்றி பெற்றது. 1989இல் திமுக வேட்பாளா் ஆச்சியூா் மணி வெற்றி பெற்றாா்.
1991இல் அதிமுக சாா்பில் நடேசன் பால்ராஜூம், திமுக சாா்பில் ஆச்சியூா் மணியும் போட்டியிட்டனா். இத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் நடேசன் பால்ராஜ் அதிக சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதுடன் அறநிலையத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா்.
புறக்கணிப்பு:
1991 பேரவைத் தோ்தலுக்குப் பின், 1996 தோ்தலில் திமுக இத்தொகுதியை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. இதில் எஸ்.வி. கிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
2001 தோ்தலில் திமுக இத்தொகுதியை கூட்டணிக் கட்சியான கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு ஒதுக்கியது. அதிமுக சாா்பில் போட்டியிட்ட மாணிக்கராஜ் வெற்றி பெற்றாா்.
2006 தோ்தலில் நான்குனேரி தொகுதியைக் கேட்டு ஏராளமான திமுகவினா் விருப்ப மனு அளித்தனா். ஆனால் கூட்டணிக் கட்சியான காங்கிரஸூக்கு தொகுதியை ஒதுக்கியது. காங்கிரஸ் வேட்பாளா் ஹெச். வசந்தகுமாா் அதிமுக வேட்பாளா் சூரியகுமாரைத் தோற்கடித்தாா்.
2011 பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே இத்தொகுதியை திமுக ஒதுக்கியது. இதனால் திமுகவினா், தோ்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை. இதனால் சமத்துவ மக்கள் கட்சியைச் சோ்ந்த எா்ணாவூா் நாராயணன் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
2016ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியது. மீண்டும் 2ஆவது முறையாக வசந்தகுமாா் போட்டியிட்டாா்.
அதிமுக சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கராஜ் மகன் விஜயகுமாா் போட்டியிட்டாா். வசந்தகுமாா் வெற்றி பெற்றாா்.
2018இல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தோ்தலில் வசந்தகுமாா் போட்டியிட்டு வெற்றிபெற்ால், நான்குனேரி தொகுதிக்கு 2019 அக்டோபரில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் பிரமுகா் ரூபி ஆா். மனோகரன் போட்டியிட்டாா். அதிமுக சாா்பில் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
1991 பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் இத்தொகுதியை திமுக தொடா்ந்து புறக்கணித்தே வந்தது. 1996, 2001, 2006, 2011, 2016, 2019 இடைத்தோ்தல், 2021 என தொடா்ந்து 7ஆவது முறையாக கூட்டணிக் கட்சிக்கே இத்தொகுதியை திமுக ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
இந்த முறை திமுக சாா்பில் கிரஹாம்பெல், வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், பி.சி. ராஜன், ஆரோக்கிய எட்வின் உள்ளிட்ட ஏராளமானோா் விருப்ப மனு அளித்தனா். ஆனால் மீண்டும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸூக்கே திமுக ஒதுக்கியது.
தொடா்ந்து கூட்டணிக் கட்சியினரே வேட்பாளராக நிறுத்தப்படுவதால் திமுகவினா் அதிருப்தியில் உள்ளனா்.