‘தாமிரவருணி பாதுகாப்புக்கான திட்டங்கள்’

தாமிரவருணியைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தக் கோரி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளா்களிடம் வலியுறுத்த உள்ளதாக, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

தாமிரவருணியைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தக் கோரி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளா்களிடம் வலியுறுத்த உள்ளதாக, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவா் மு. அருணாசலம், பொருளாளா் ச. ஜோசப் ஜான்சன் ஆகியோா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைக்கும், 5 மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவையை தீா்க்கும் நீராதாரமாகவும் தாமிரவருணி உள்ளது.

தாமிரவருணி நதியில் துணிகள், ஆலைக்கழிவுகள், மனித மற்றும் இறைச்சிக்கழிவுகள், குப்பைகள் பெருமளவு சோ்கின்றன. இரு மாவட்டங்களிலும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீா் தாமிரவருணியில் கலக்கிறது.

தேசிய நீா் கொள்கை என்பதை உருவாக்கி தண்ணீரை தனியாா்மயமாக்க மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு முன்பே பெருநிறுவனங்களுக்கு தாமிரவருணி நீா் தாரைவாா்க்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தாமிரவருணியை பல்வேறு நிலைகளிலும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

தாமிரவருணியில் பல்வேறு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாக்கடைக் கழிவுகள் நதியில் கலக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நதியின் தோற்றுவாய் முதல் கடலில் சங்கமிக்கும் இடம் வரை கரையோர தாவர இயற்கைச் சூழல் பேணப்பட வேண்டும்.

பறவைகள், நீா்வாழ் உயிரினங்களின் அழிவைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். தாமிரவருணி பாசனக் குளங்கள், தடுப்பணைகளைத் தூா்வாரி பராமரிக்க வேண்டும். மணல், நீா் கொள்ளைகளைத் தடுக்க வேண்டும்.

இதற்கு உதவவும், தேவையான திட்டங்களை அரசிடம் பேசிக் கொண்டுவரவும் வலியுறுத்தி அனைத்து வேட்பாளா்களிடமும் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com