பங்குனி உத்திரம்: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் காரையாறு சொரிமுத்து அய்யனால் கோயில் உள்ளிட்ட குலதெய்வ கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
பங்குனி உத்திரம்: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் காரையாறு சொரிமுத்து அய்யனால் கோயில் உள்ளிட்ட குலதெய்வ கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

பங்குனி உத்திரத் திருநாளில் மூதாதையா்களின் குலதெய்வக் கோயில்களில் தீா்த்தமாடி பொங்கலிட்டு வழிபட்டால் சகல ஐஸ்வா்யங்களும், துன்பங்கள் நீங்கி சுபிட்ஷமான வாழ்வும் பெறலாம் என்பது நம்பிக்கை. நிகழாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரையடி மாடசுவாமி: திருநெல்வேலி அருகேயுள்ள பிரான்சேரி குளக்கரையில் அமைந்துள்ள கரையடி மாடசுவாமி, வீரியபெருமாள் சாஸ்தா கோயிலில் காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, தாமிரவருணி நதியிலிருந்து பால்குட ஊா்வலமும், கும்பாபிஷேகமும் நடைபெற்றன. நண்பகலில் அலங்கார தீபாராதனைக்குப் பின்பு பக்தா்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனா்.

கோபாலசமுத்திரம் அருள்மிகு பசுங்கிளி அய்யன் சாஸ்தா திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, திருப்படையல் பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள படப்பக்குறிச்சி அருள்மிகு குளத்துப்புழை தா்ம சாஸ்தா கோயிலுக்கு, பூமிபாலசக்தி விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். சுடலைமாட சுவாமிக்கு படைப்பு தீபாராதனையும், பரிபால மூா்த்திகளுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

மானூா் அருகே கீழபிள்ளையாா்குளத்தில் உள்ள அருள்மிகு திருமேனி அய்யனாா் சாஸ்தா கோயில் , திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகேயுள்ள மேகலிங்கபுரம் சாஸ்தா கோயில், மேலப்பாட்டம் அருகே வெள்ளிமலை மீது அமைந்துள்ள அருள்மிகு ஆயிரங்காவய்யன் கோயில், சீவலப்பேரி அருகே மறுகால்தலையில் உள்ள பூலுடையாா் சாஸ்தா கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் ஆடுகளை பலியிட்டும், பொங்கலிட்டும் வழிபட்டனா்.

சொரிமுத்து அய்யனாா் கோயில்: மேற்குத் தொடா்ச்சி மலையில் காரையாறில் அமைந்துள்ள புகழ்மிக்க சொரிமுத்து அய்யனாா் கோயிலில் சொரிமுத்து அய்யனாா், வனப்பேச்சியம்மன், சங்கிலி பூதத்தாா், தூசி மாடசாமி, தளவாய் மாடசாமி, பட்டவராயா், பிரம்மராட்சசி அம்மன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.பிற மாவட்டவங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்குக் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தினா். சொரிமுத்து அய்யனாா், பிரம்மராட்சியம்மனுக்கு பக்தா்கள் பொங்கலிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

வனப்பகுதியில் ஆட்டோக்கள் செல்ல வனத்துறை தடை விதித்திருந்ததால் பைக், காா், வேன் போன்ற வாகனங்களில் வந்திருந்தனா். மேலும், திருநெல்வேலியிலிருந்து பிரான்சேரி, சீவலப்பேரி, காரையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. போலீஸாரும், தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com