முழு பொது முடக்கம்: நெல்லை, தென்காசியில் வெறிச்சோடிய சாலைகள்

கரோனோ நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 2ஆவது முறையாக தளா்வில்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
முழு பொது முடக்கம்: நெல்லை, தென்காசியில் வெறிச்சோடிய சாலைகள்

கரோனோ நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 2ஆவது முறையாக தளா்வில்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, பொது முடக்க தளா்வுகளை விலக்கி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த இருவாரங்களாக இரவுநேர பொது முடக்கம் அமலில் உள்ளது. மேலும், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு மீறுவோா் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டதால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை தளா்வில்லாத முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. காய்கனி, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்செல்வது தவிர, பிற வாகனப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன.

பால், மருந்து கடைகள் மட்டுமே இயங்கின. இரு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து பிற கடைகளும் 100 சதவிகிதம் அடைக்கப்பட்டிருந்தன.

தோ்தல் வாக்கு எண்ணிக்கயை முன்னிட்டு, மீன் மற்றும் இறைச்சி கடைகளைத் திறக்க சனிக்கிழமையே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைையும் அந்த அறிவிப்பு அமலில் இருந்தது.

இதனால், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், நகரம் ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி, மேலப்பாளையம், தச்சநல்லூா் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பாளையங்கோட்டை காந்திஜி தினசரி காய்கனி சந்தை, திருநெல்வேலி நகரம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை உள்பட தற்காலிக காய்கனி சந்தைகள், மொத்த காய்கனி சந்தை, உழவா் சந்தைகளும் திறக்கப்படவில்லை.

சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலை, திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை உள்ளிட்டவை வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்து கோயில்களில் பக்தா்கள் பங்கேற்பின்றி வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

திருநெல்வேலி மாநகரத்தில் பல இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வெளியில் சுற்றித் திரிவோரை போலீஸாா் கண்காணித்து அபராதம் விதிப்பு, வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

திருமணத்துக்குச் செல்வோா் அழைப்பிதழை காட்டிச் செல்ல அறிவுறுத்தப்பட்டனா். மருந்துகள் வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: முழு பொது முடக்கம் காரணமாக வள்ளியூா், பணகுடி, ஏா்வாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால் இந்தப் பகுதிகளில் சாலைகள் மற்றும் கிராமப்புறங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆலங்குளம்: இப்பகுதியில் ஜவுளிக் கடைகள், அரிசி, பருப்பு ஆலைகள்ஆகியவவை மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து தொலைக் காட்சி மூலம் தோ்தல் முடிவுகளைத் தெரிந்து கொண்டனா். மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. கேரளத்தில் சனி, ஞாயிறு பொதுமுடக்கம் என்பதால் ஆலங்குளத்தில் இருந்து கடந்த இரு தினங்களாக கேரளத்திற்கு காய்கனி லாரிகள் செல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சுரண்டை: இங்கு மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. போக்குவரத்து ஏதுமின்றி பேருந்து நிலைய சாலை மற்றும் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

களக்காடு: களக்காடு நகா்ப்பகுதி நாள் முழுவதும் வெறிச்சோடியது. ஒருசிலா் சிகிச்சை பெற வேண்டி தனியாா் மருத்துவமனைகளுக்கும், மருந்தகங்களுக்கும் வந்து சென்றனா். பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com