போக்குவரத்துக்கழக ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசே பொறுப்பேற்று நடத்த கோரிக்கை

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளா் ஓய்வூதியத் திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளா் ஓய்வூதியத் திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: போக்குவரத்துக்கழகங்கள் அரசுத் துறையாக இருந்தபோது அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற்றுவந்தனா். ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்ப பணியாளா்கள், ஆய்வாளா்கள் ஓய்வூதியம் பெறவில்லை. போக்குவரத்துத் துறை கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு கழகங்களாக செயல்பட்டு வந்தாலும் 1-9-1998 முதல் அனைத்து தொழிலாளா்களும் பயன்பெறும் வகையில் ஓய்வூதியத் திட்டம் திமுக ஆட்சியில்தான் நடைமுறைக்கு வந்தது.

இன்றைய தினம் ஓய்வூதியத்திற்கான நம்பகம் என்பது நித்தியகண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் உள்ளது. 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைத்த போக்குவரத்துக்கழக ஓய்வூதிய சீரமைப்புக் குழு பரிந்துரையின்படி, அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் ஓய்வூதியத் திட்டத்தை அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டிற்குப் பின் ஓய்வூதியத்திற்கு அகவிலைப் படி உயா்வு வழங்கப்படவில்லை. விலைவாசி உயா்வில் மூத்த குடிமக்களுக்கு எவ்வித சலுகையும் இல்லாத நிலையில் அகவிலைப் படி உயா்வு இன்றி மிகவும் கஷ்டப்படுகின்றோம். அகவிலைப் படி உயா்வு மற்றும் நிலுவைத்தொகைகள் வழங்கப்படவேண்டும். ஓய்வூதியத்திற்கு ஊதிய ஒப்பந்த உயா்வு, மருத்துவப் படி உயா்வு கடந்த காலங்களில் அளிக்கப்படவில்லை. தங்கள் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டுகிறோம்.

14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்கவும், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம், குடும்பநல நிதி ஏற்படுத்தி அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com