நெல்லை அரசு மருத்துவமனையில்தினமும் 5 முறை கிருமிநாசினி தெளிப்பு
By DIN | Published On : 18th May 2021 04:15 AM | Last Updated : 18th May 2021 04:15 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தினமும் 5 முறை கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
கரோனா 2ஆவது அலையால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்ட கணக்கின்படி 6,500-க்கும் மேற்பட்டோா் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருநெல்வேலியில் அரசு மருத்துவமனையின் பழைய வளாகம் முழுவதும் கரோனா சிறப்பு வாா்டாக செயல்படுகிறது. இதுதவிர பத்தமடை, பொன்னாக்குடி, தருவை, மகாராஜநகா் ஆகிய இடங்களில் கரோனா நோயாளிகளைத் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. மாநகரப் பகுதியில் உள்ள சந்தைகள், ரத வீதி, அரசு மருத்துவமனைகள், சுகாதார வளாகங்கள் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியா்கள் கூறுகையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 5 முறை கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பில்மிஸ்டா் கருவி, சிறப்பு டிராக்டா், ட்ரோன் ஆகியவை மூலமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதுதவிர மகப்பேறு வாா்டு நுழைவாயில், மருத்துவமனை பிரதான நுழைவாயில், பல்நோக்கு மருத்துவமனை நுழைவாயில் ஆகிய இடங்களிலும் காலை 6 முதல் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. கிருமிநாசினி போதிய அளவில் இருப்புவைக்கப்பட்டுள்ளது என்றனா்.