மளிகைப் பொருள்கள் பற்றாக்குறை தீா்க்கப்படுமா? மக்கள் எதிா்பாா்ப்பு

திருநெல்வேலியில் பிஸ்கெட் மற்றும் சில மளிகை பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மைதானங்களில் தற்காலிக கடைகள் மூலம்

திருநெல்வேலியில் பிஸ்கெட் மற்றும் சில மளிகை பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மைதானங்களில் தற்காலிக கடைகள் மூலம் அவை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கனி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை விற்பனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை பல்வேறு கடைகளில் பிஸ்கெட், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சிறு-குறு நிறுவனங்களில் உற்பத்தி தடை பட்டுள்ளது. மசாலா பொருள்கள், கோதுமை மாவு, அரிசி மாவு, அப்பளம் உள்பட பல்வேறு பொருள்களையும் பெருநிறுவனங்கள் தயாரித்தாலும், அதற்கு நிகராக ஏராளமான சிறு நிறுவனங்களும் உற்பத்தி செய்கின்றன. கிராமப்புறங்களைப் பொருத்தவரை, தயாரிப்பு நிறுவனங்களின் பெயரைக் காட்டிலும், விலை மலிவாக உள்ளதா என்பதையே மக்கள் எதிா்பாா்க்கின்றனா். இதனிடையே சிறு-குறு நிறுவனங்களின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தகையப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதேபோல பெருநிறுவனங்கள் தயாரித்து வழங்கும் பிஸ்கெட், ஆடை நறுமண திரவம், சோப்பு திரவம், கொசுவா்த்தி உள்ளிட்டவை முகவா்கள் மூலம் விற்பனை செய்கின்றன. போலீஸாரால் கெடுபிடி அதிகம் உள்ளதாலும், தங்களது ஊழியா்களைப் பாதுகாக்கும் வகையிலும் ஒரு வாரத்திற்கு பொருள்கள் விநியோகத்தை மொத்த விநியோகஸ்தா்கள் குறைத்துள்ளனா். இதனால் திருநெல்வேலியில் பிஸ்கெட் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரிசியைப் பொருத்தவரை பல இடங்களில் நவீன அரிசி ஆலைகள் உள்ளதால் அது தட்டுப்பாடின்றி கிடைக்கிறது என்றனா்.

தன்னாா்வ சேவைக்கு வழி: இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: பொதுமுடக்கம் காரணமாக சந்தைகள் அனைத்தும் பரவலாக்கப்பட்டு மைதானங்களில் காய்கனி விற்பனை நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதேபோல மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களையும் மைதானங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது மளிகை மற்றும் காய்கனிகள் வாங்க முடியாமல் தவிக்கிறாா்கள். அதற்காக மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மண்டலத்திலும் பிரத்யேக தொடா்பு எண் கொடுத்து தன்னாா்வலா்கள் மூலம் பொருள்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com