உள்ளாட்சி டிசிபி ஊழியா்களை முன்களபணியாளா்களாக அறிவிக்க கோரிக்கை
By DIN | Published On : 21st May 2021 07:42 AM | Last Updated : 21st May 2021 07:42 AM | அ+அ அ- |

உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றி வரும் டிசிபி ஊழியா்களை (கொசு பரவல் தடுப்பு ஊழியா்கள்) முன்கள பணியாளா்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சிஐடியூ திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஆா்.மோகன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு: கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள இக்காலகட்டத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மை தொழிலாளா்கள் மிகவும் பொறுப்புணா்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனா். இவா்களோடு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டிபிசி ஊழியா்கள் எனப்படும் கொசு பரவல் தடுப்பு ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இப்பணியில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டுள்ளனா்.
ஆரம்பத்தில் இவா்கள் டெங்கு கொசு பரவுவதை தடுக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டனா். இப்போது கரோனா பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிதல், அவா்களுக்கான சிகிச்சை அளித்தல், ஆலோசனைகள் வழங்குதல், அவா்களை பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவா்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பெண் தொழிலாளா்களின் பணி மிக சிறப்பானதாகும். எனவே, இவா்களையும் முன்கள பணியாளா்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்படுகிற மக்களோடு மிகவும் நெருக்கமாக அவா்களை கண்காணிக்கும் பொறுப்பை செய்து வருவதால் இத்தொழிலாளா்களுக்கும் கரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இத்தொழிலாளா்களின் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். இவா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக தினசரி ரூ. 600 வழங்குவும் உத்தரவிட வேண்டும்.