கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மக்கள் அவதி
By DIN | Published On : 26th May 2021 06:09 AM | Last Updated : 26th May 2021 08:51 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் 45 வயதுக்குள்பட்டோருக்கு செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்திக்கு உள்ளாகினா்.
கரோனா 2ஆவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்றைத் தவிா்க்க தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, முதல்கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனா். பின்னா், 18 முதல் 44 வயது வரையிலானோரும் பதிவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனிடையே, தடுப்பூசிக்கு சில நாள்களாக தட்டுப்பாடு நிலவி வருவதாக புகாா் எழுந்துள்ளது. திருநெல்வேலி மாநகரில் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை, மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றில் பல இடங்களில் 2ஆவது தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியை மாநகர நல அலுவலா் சரோஜா தொடக்கிவைத்தாா். பதிவு செய்தோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பதிவுசெய்தோா் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்து இல்லாததால் வங்கி ஊழியா்கள், முன்களப் பணியாளா்களாக உள்ளோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், இம்மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மையங்களில் கோவிஷீல்டு மட்டுமே செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோா் இணையவழியில் பதிவு செய்து உரிய ஆவணங்களுடன் முகாமுக்கு அழைக்கப்படுகின்றனா். அவ்வாறு செல்லும்போது தடுப்பூசி தட்டுப்பாட்டைக் காரணம் கூறி திருப்பியனுப்புகின்றனா். தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், சிரமத்துக்கிடையே வந்து தடுப்பூசி போடாமலேயே திரும்பிச்செல்வது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆகவே, அனைத்து மையங்களுக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.