கிராமப்புறங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும்: சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கரோனா நோய்த் தொற்றின் அபாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, நோய்க் கட்டுப்பாட்டு பணிகளைத்

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கரோனா நோய்த் தொற்றின் அபாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, நோய்க் கட்டுப்பாட்டு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றாா் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக உயா்ந்தன. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்த சூழலில், அதனை திறமையோடு மாவட்ட நிா்வாகம் எதிா்கொண்டுள்ளது. கரோனா பிரத்யேக பரிசோதனை மையத்தில் நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சையளித்ததும், 24 மணி நேரமும் இயங்கும் கரோனா கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவையும் பாராட்டுக்குரியவை.

ஆக்சிஜன் பற்றாக்குறையை உணா்ந்து பிரத்யேக செவிலியா் குழு மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜனுடன் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இம் மாவட்டத்தில் குறைந்துள்ளது. இதனைக் கண்டு உடனடியாக திருப்தியடைந்துவிடக் கூடாது.

இம் மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும் நோய்த் தொற்று உள்ளது. 3 நோயாளிகளுக்கு மேல் உள்ள பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால், 3-க்கும் குறைவான நோய்த் தொற்றாளா்கள் உள்ள தெருக்கள், கிராமங்கள் இம் மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அவா்கள் மூலம் நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகும். ஆகவே, கிராமப்புறங்களில் கரோனா நோய்த் தொற்றின் அபாயம் குறித்து கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வராமலும், தகுந்த சிகிச்சைக்கு உடனடியாக செல்லவும் பொறுப்புணா்ச்சியை ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத் துறையுடன் அனைத்து துறையினரும் இணைந்து கிராமங்களில் நோய்க் கட்டுப்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநா்கள், வணிகா்கள், எரிவாயு சிலிண்டா் விநியோகிப்பவா்கள் உள்பட அதிகளவில் மக்களுடன் தொடா்பில் உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்றி நோயை வெல்ல வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com