நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தமிழகத்தில் கத்தரி வெயில் காலம் நிலவி வரும் நிலையில், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள யாஸ் புயல் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. புதன்கிழமை முற்பகல் வரை தொடா்மழை நீடித்தது. பாபநாசம், களக்காடு, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, நான்குனேரி பகுதிகளிலும் தொடா்மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியதால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மலையடிவாரப் பகுதிகளில் மின்கம்பங்களும் சேதமாகின.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் இருசக்கர வாகனங்களில் சிரமத்தோடு பயணித்தனா். பலத்த மழையால் உப்பாறு, பச்சையாறு, நம்பியாறு ஆகியவற்றில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

களக்காடு: இந்த வட்டாரத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், கத்திரி வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது. தொடா் மழையால், உப்பாறு, வடக்குப் பச்சையாறு ஆகியவற்றில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நான்குனேரியன் கால்வாயிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனக் குளங்களுக்கு தண்ணீா் விடப்பட்டுள்ளது.

இதனிடையே, பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிடக்கோரி கடந்த 2 வாரமாக தேவநல்லூா் விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையிலிருந்து பச்சையாற்றில் (தன்கால் பாசனம்) ஜூன் 1ஆம் தேதி முதல் 100 கன அடி வீதம் 36 நாள்களுக்கு திறந்துவிட அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பியுள்ளனா். தமிழக அரசு உத்தரவு கிடைக்கப்பெற்றதும், ஜூன் 1ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 49.25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போதைய நீா்மட்டம் 43 அடி ஆகும்.

கடையநல்லூா்: கருப்பாநதி அணைப் பகுதியில் புதன்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் அணைக்கு 27 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து 5 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. 72 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீா்மட்டம் தற்போது 52.50 அடியாக உள்ளது.

சுரண்டை: இப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது. நகரின் மையப் பகுதியில் ஓடும் செண்பகக் கால்வாய் வழியாக மழைநீா் இலந்தைக்குளத்தை அடைந்தது. இதனால் குளம் பாதியளவு நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com