நெல்லை மாவட்டத்தில் தொடர்மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் திங்கள்கிழமை விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் திங்கள்கிழமை விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. நான்காவது நாளாக திங்கள்கிழமை அதிகாலை முதலே சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பொன்னாக்குடி, பிராஞ்சேரி, மானூர், சுத்தமல்லி, அபிஷேகப்பட்டி, தாழையூத்து, சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

தாமிரவருணி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீருடன் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி பகுதி குடியிருப்புகளில் பெய்த தண்ணீரும், எலுமிச்சையாறு, கோதையாறு, பச்சையாறு ஆகியவற்றில் பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து திருநெல்வேலி மாநகர பகுதியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கருப்பந்துறை, குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ்வரம், சிந்துபூந்துறை பகுதியில் இருந்த 25 கோயில்கள், 15 கல்மண்டபங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. குறுக்குத்துறை முருகன் கோயிலின் மூலவரை தரிசிக்க முடியாமல், கரையோர மண்டபத்தில் உள்ள உற்சவரை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.  

திருநெல்வேலியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளான கோடீஸ்வரன்நகர், பாலபாக்யாநகர், மனக்காவலம்பிள்ளைநகர், அண்ணா நகர், சேவியர்காலனி உள்ளிட்டவற்றில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. என்.ஜி.ஓ. காலனி பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதேபோல தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் குண்டும்-குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

கரோனா பொதுமுடக்க தளர்வின்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் 1 முதல் 8 ஆம்  வகுப்பு வரையிலான மாணவர்-மாணவிகளுக்கு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதும் பெய்த தொடர்மழையாலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் காரணமாகவும் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை ஒருநாள் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உத்தரவிட்டார்.  கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. 

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு: அம்பாசமுத்திரம்-17.4, சேரன்மகாதேவி-21, மணிமுத்தாறு-6.60, நான்குனேரி-14.50, பாளையங்கோட்டை-10, பாபநாசம்-11, ராதாபுரம்-52, திருநெல்வேலி-11.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com