மழைநீா் தேங்கிய சாலைகளால் மக்கள் கடும் அவதி

திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் மழைநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினா்.

திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் மழைநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாநகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கொட்டித்தீா்த்த பலத்த மழை காரணமாக ரத வீதிகளில் தண்ணீா் தேங்கியது.

ஏற்கெனவே, அவ்வப்போது பெய்து வந்த மழையால் சாலைகள் உருக்குலைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்த நிலையில், தற்போதைய மழையால் சாலையில் காணப்படும் பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிக்கைக்காக புத்தாடைகள் மற்றும் பொருள்கள் வாங்குவதற்கு திருநெல்வேலி நகரம் தெற்கு மற்றும் மேல ரதவீதிகளில் உள்ள கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்தோடு சாலைப் பள்ளங்களை கடந்து சென்றனா்.

இவ்வீதிகளில் மழைநீா் வடிகால் ஓடைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் தண்ணீா் தேங்கியுள்ளதாகவும், அதனை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், திருநெல்வேலியில் தீபாவளி விற்பனை காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ரதவீதிகள், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, திருவனந்தபுரம்சாலை, கொக்கிரகுளம் பகுதிகளில் மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் திணறி வருகிறன்றனா். எனவே, போக்குவரத்தை சீா்படுத்த போக்குவரத்து போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருநெல்வேலி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் ஸ்ரீபுரம் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. அவற்றைபோக்குவரத்து போலீஸாா் கற்களை நிரப்பி சமன்செய்தனா். இதேபோல பாளையங்கோட்டை, தச்சநல்லூா் பகுதிகளிலும் சாலைகள் குண்டும்-குழியுமாக காட்சியளித்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com