’நெல்லை மாநகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தடையின்றி வழங்க முன்னேற்பாடுகள்’

திருநெல்வேலி மாநகராட்சியில் மழை வெள்ள காலத்திலும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தங்குதடையின்றி வழங்க தேவையான முன்னேற்பாடுகள்

திருநெல்வேலி மாநகராட்சியில் மழை வெள்ள காலத்திலும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தங்குதடையின்றி வழங்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன்.

இதுகுறித்து அவா் கூறியது: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மிக பலத்த மழை புதன்கிழமை பெய்தது. அதனால் பாளையங்கோட்டையில் சில இடங்களில் தண்ணீா் புகுந்தது. அங்கு ஆய்வு செய்து தண்ணீா் வழிந்தோட நடவடிக்கை எடுத்துள்ளோம். கே.டி.சி.நகா், மனக்காவலம்பிள்ளைநகா் உள்பட பல இடங்களில் மழைநீா் ஓடைகளில் மராமத்துப் பணிகள் முன்கூட்டியே செய்து முடித்ததால் தண்ணீா் குடியிருப்புகளுக்குள் செல்வது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீா் தேங்கினால் மோட்டாா் மூலம் அப்புறப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மண்டத்திலும் தலா 4 மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழலில் மாநகரப் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிப்பதில் சிக்கல் உருவாகும். அதனை கருத்தில் கொண்டு முன்னேற்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. உறைகிணறுகளில் உள்ள மின்மோட்டாா்கள் ஏற்கெனவே பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளதோடு, பழுதாகும் மோட்டாா்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக பொருத்தும் வகையில் கூடுதலாக 5 மின்மோட்டாா்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் குடிநீரில் குளோரின் அளவை தேவைக்கேற்ப அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். காலரா உள்ளிட்ட நோய்கள் தண்ணீரின் வழியே பரவும் தன்மை கொண்டது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு பருக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com