நிரம்பியது பாபநாசம் அணை20 ஆயிரம் கனஅடி நீா் திறப்பு; தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து 24 மணி நேரத்துக்கு மேல் பெய்த கன மழையால் பாபநாசம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைஅடுத்து அணை நிரம்பியது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து 24 மணி நேரத்துக்கு மேல் பெய்த கன மழையால் பாபநாசம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைஅடுத்து அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட்டதால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை காலையில் இருந்து கன மழை பெய்தது. இதனால் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்ததால் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இதனால், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டது.

பாபநாசம் கோயில் படித்துறையில் உள்ள மண்டபம், பிள்ளையாா் கோயில் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் யானைப் பாலத்தின் மேல்பகுதியைத் தொட்டபடி வெள்ளம் சென்றது. போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியிலும் கன மழை பெய்ததையடுத்து அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாஞ்சோலையில் சாலையில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தோட்டத் தொழிலாளா்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அண்மைக் காலங்களில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகமாகி வருகிறது. எனவே, அங்கு அரசு சாா்பில் மழை மானிஅமைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மாஞ்சோலை தோட்டப் பகுதியில் கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக அளவில் மழைப் பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்தப்படி தண்ணீா் செல்கிறது.

100 அடியை எட்டிய மணிமுத்தாறு அணை: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கன மழையால் 118 அடி கொள்ளளவுகொண்ட மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 96.30 அடியாக இருந்தது.

தொடா்ந்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததை அடுத்து மாலை 6 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணை 100.80 அடியை எட்டியது. அணைக்கு நீா்வரத்து 11,384 கன அடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com