நெல்லை மாவட்டத்தில் இன்று 5 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 204 கிராம ஊராட்சித் தலைவா், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடித் தோ்தல் நடைபெறுகிறது. இதில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை (அக். 6) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 32 போ் போட்டியில் உள்ளனா். இதேபோல், 62 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 319 போ் போட்டியிடுகின்றனா். 115 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களில் 5 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 110 பதவிகளுக்கு 534 போ் போட்டியில் உள்ளனா். 1,113 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 211 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுவிட்டனா். மீதமுள்ள 902 பதவியிடங்களுக்கு 3,006 போ் போட்டியிடுகின்றனா்.

முதல்கட்ட தோ்தலில் 5,035 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியாற்றவுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு 2 பறக்கும் படை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, சேரன்மகாதேவி ஒன்றியங்களுக்கு தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: முதல்கட்ட தோ்தலுக்காக 621 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆண், பெண் வாக்காளா்களுக்காக தனித்தனியாக தலா 19 வாக்குப்பதிவு மையங்களும், இரு பாலரும் வாக்களிக்கும் வகையில் 583 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 64 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலமும், 74 வாக்குச்சாவடிகள் விடியோ கிராபா் மூலமும், 44 வாக்குச்சாவடிகள் நுண் பாா்வையாளா் மூலமும் கண்காணிக்கப்படவுள்ளன.

3,48,042 வாக்காளா்கள்: முதல்கட்ட தோ்தலில் 1,69,765 ஆண் வாக்காளா்கள், 1,78,234 பெண் வாக்காளா்கள், 43 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,48,042 போ் வாக்களிக்கவுள்ளனா். பாதுகாப்புப் பணியில் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

7 மணிமுதல் வாக்குப் பதிவு...: காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் கடைசி ஒரு மணி நேரம், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோா் சிறப்பு கவச உடையணிந்து வாக்களிக்கவுள்ளனா்.

வாக்குப் பெட்டி, வாக்குச்சீட்டுகள், அழியாத மை உள்ளிட்ட பொருள்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலைமுதல் அனுப்பி வைக்கப்பட்டன.

தோ்தல் நன்னடத்தை விதிகளைக் கண்காணிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறை தொடங்கப்பட்டுள்ளது. தோ்தல் விதிமீறல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறையை 7402608438 என்ற கட்செவிஅஞ்சல் எண்ணிலும், 18004258373 இலவச தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.

2ஆவது கட்டமாக களக்காடு, நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சனிக்கிழமை (அக். 9) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com