பொதுமக்கள் புறக்கணிப்பால் வீரவநல்லூா் அருகே 3 மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு

வீரவநல்லூா் அருகே மாதுடையாா்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
பொதுமக்கள் புறக்கணிப்பால் வீரவநல்லூா் அருகே 3 மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு

வீரவநல்லூா் அருகே மாதுடையாா்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, 3 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது மலையான்குளம் ஊராட்சி. மலையான்குளம் ஊராட்சி 5 மற்றும் 6 வாா்டு மாதுடையாா்குளம் கிராமம். இந்த வாா்டில் சுமாா் 550 வாக்குகள் உள்ளன. புதன்கிழமை உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற நிலையில், மாதுடையாா்குளம் கிராமத்துக்கு தனி ரேஷன் கடை அமைக்காததைக் கண்டித்தும், அடிப்படை வசதிகள் கோரியும் பொதுமக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி வாக்களிக்கச் செல்லவில்லை.

சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் சீதாதேவி, மண்டல துணை வட்டாட்சியா் மஹாராஜன், சேரன்மகாதேவி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பொன்னுலெட்சுமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தோ்தலுக்குப் பின்னா் ஆட்சியரிடம் பேசி கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் எழுத்துபூா்வ உறுதியளித்ததையடுத்து அவா்கள் வாக்களிக்க சம்மதித்தனா்.

இதுகுறித்து அவ்வூரைச் சோ்ந்த கற்பகவள்ளி கூறும்போது, இக்கிராமத்துக்கு நான் திருமணமாகி வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. இங்கு 250 குடும்ப அட்டைகள் உள்ளன. 3 தலைமுறைகளுக்கும் மேலாக இங்கிருந்து 5 கிமீ தொலைவுக்கும் அதிக தொலைவுள்ள மலையான்குளத்துக்கு வயல்வெளி வழியாகவும், காட்டாற்றைத் தாண்டியும் சென்றுதான் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளது. இங்கு கழிப்பறை, போக்குவரத்து, குடிநீா் வசதியில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் வாக்களிக்க சம்மதித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடா்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

வட்டாட்சியா் உறுதியளித்ததையடுத்து முற்பகல் 10.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. தொடா்ந்து, பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com