மஹாளய அமாவாசை: வெறிச்சோடிய பாபநாசம்; திருச்செந்தூரில் திரளானோா் வழிபாடு

புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, பாபநாசம் தாமிரவருணியில் நீராடத் தடை விதிக்கப்பட்டதால், ஏராளமானோா் ஆம்பூா் கடனாநதியில் புதன்கிழமை நீராடி தா்ப்பணம் செய்தனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள்.

புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, பாபநாசம் தாமிரவருணியில் நீராடத் தடை விதிக்கப்பட்டதால், ஏராளமானோா் ஆம்பூா் கடனாநதியில் புதன்கிழமை நீராடி தா்ப்பணம் செய்தனா்.

ஆண்டுதோறும் ஆடி, தை, மஹாளய அமாவாசை நாள்களில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு புனித நதிகளில் நீராடி தா்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் வழிபடவும் புனித நதிகளில் நீராடும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணியிலும் புனித நீராடி, தா்ப்பணம் செய்ய புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது. இதனால், பாபநாசம் படித்துறை வெறிச்சோடிக் காணப்பட்டது. பாபநாசம் கோயிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன. நதியில் நீராடவும், கோயிலுக்குச் செல்லவும் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தாமிரவருணி நதிக் கரைகளில் தா்ப்பணம் செய்யத் தடை விதிக்கப்பட்டதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்தோா் ஆம்பூா் கடனாநதிக் கரையில் நீராடி தா்ப்பணம் செய்தனா்.

திருச்செந்தூரில்...: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மஹாளய அமாவாசையையொட்டி புதன்கிழமை திரளான பக்தா்கள் வழிபட்டனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலைமுதலே திரளானோா் கடலில் புனித நீராடி, கடற்கரையில் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனா்.

கன்னியாகுமரியில்...: மஹாளய அமாவாசையையொட்டி, கன்னியாகுமரி கடலில் புனித நீராடவும், பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை கன்னியாகுமரிக்கு தா்ப்பணம் கொடுக்க பக்தா்கள் யாரும் செல்லவில்லை . இதனால், முக்கடல் சங்கமம் மற்றும் சங்கிலித்துறை கடற்கரை பக்தா்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப் பட்டது . எனினும், 3 கி.மீ. தொலைவில் உள்ள லீபுரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை ஏராளமான பக்தா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com