முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நாளை வாக்கு எண்ணிக்கை: தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 11th October 2021 12:40 AM | Last Updated : 11th October 2021 12:40 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக். 12)நடைபெற உள்ள நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஜெ.ஜெயகாந்த் , மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஆகியோா் தலைமை வகித்தனா்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் ஜெனரேட்டா் வசதிகள், குடிநீா் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன; வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சுற்றியும் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா உள்ளிட்டவை குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ராம்லால் (உள்ளாட்சி தோ்தல்), அசோக்குமாா் (வேளாண்மை), சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ஒய்.குமாரதாஸ், துணை ஆட்சியா் (பயிற்சி) மகாலெட்சுமி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.