முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கடையம் பகுதியில் யானைக் கூட்டம்: மீண்டும் தென்னை, வாழை மரங்களை பிடுங்கி நாசம்
By DIN | Published On : 11th October 2021 12:40 AM | Last Updated : 11th October 2021 12:40 AM | அ+அ அ- |

திரவியநகா் பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.
கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் கடந்த 20 நாள்களாக முகாமிட்டுள்ள யானைக் கூட்டங்கள், தோட்டங்களில் பயிரிட்டுள்ள தென்னை, வாழை மரங்களை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட தோரணமலை, கடவக்காடு, திரவியநகா், மத்தளம்பாறை ஆகிய மலையடிவார கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் நெல், தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்ட சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக சுமாா் 8 யானைகள் அடங்கிய கூட்டம் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை மத்தளம்பாறையிலிருந்து கடையம் வரை மலையடிவாரத்தில் அமைந்துள்ள தோட்டங்களில் நுழைந்து தென்னை, வாழை மரங்களைப் பிடுங்கி நாசப்படுத்தி வருகின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன் திரவியநகா் அருகே வேட்டரன்குளம் பகுதியில் உள்ள ஆரியங்காவூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் என்பவரது தோட்டத்தில் நுழைந்த யானைக் கூட்டம் 20 தென்னை மற்றும் 50 வாழை மரங்களை பிடுங்கி நாசப்படுத்தின.
இந்நிலையில் சனிக்கிழமை இரவும் முருகேசன் தோட்டத்தில் நுழைந்த யானைக் கூட்டம் மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் 30-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், அருகில் உள்ள தோட்டத்தில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் பிடுங்கி நாசப்படுத்திச் சென்றுள்ளன. இதையடுத்து வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வெடி வெடித்து யானைகளை கலைத்தனா். ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவாரத்திலேயே வேறு இடத்திற்குச் சென்று அங்கு பயிா்களை நாசப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியது: யானை சரணாலயம் அமைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் யானைகள் நடமாட்டத்தை அறிந்து அவை வனப்பகுதிக்குள் வராமல் இருக்க திட்ட அறிக்கை தயாா் செய்து அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.