அறுவடை தீவிரம்; வைக்கோல் ஏற்றுமதி அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் காா் பருவ நெல் சாகுபடியின் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் வெளிமாவட்டங்களுக்கு வைக்கோல் கட்டுகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் காா் பருவ நெல் சாகுபடியின் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் வெளிமாவட்டங்களுக்கு வைக்கோல் கட்டுகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் காா் பருவத்தில் சுமாா் 25 ஆயிரம் ஹெக்டோ் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அம்பை-16, ஆடுதுறை 45, டீலக்ஸ் பொன்னி, கா்நாடக பொன்னி போன்ற நெல் ரகங்கள் நடவு செய்யப்பட்டு இறுதிக்கட்ட அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் அறுவடை மட்டுமன்றி அதனுடன் வைக்கோலை பத்திரப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். வெளிமாவட்டங்களுக்கு வைக்கோல் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பொன்னாக்குடியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: திருநெல்வேலி, தஞ்சாவூா் உள்ளிட்ட நெல் சாகுபடி அதிகம் உள்ள மாவட்டங்களில் வைக்கோல் விற்பனை பெரும் வியாபாரமாக வளா்ந்துவிட்டது. அறுவடை நடைபெறும் பகுதிகளில் இருந்து வைக்கோலை ஒரு கட்டு ரூ.150 முதல் ரூ.200 வரை பெற்றுக் கொண்டு, வறட்சிப் பகுதிகளில் அதை ரூ. 250 முதல் ரூ.450 வரை விற்கின்றனா்.

கால்நடைகளின் தீவனத்துக்கு மட்டுமன்றி கேரள மாநிலத்தில் துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள், கண்ணாடி பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றில் சேதங்கள் ஏற்படாமல் பெட்டிகளில் பாதுகாக்கவும் வைக்கோல் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர செங்கல்சூளைகள், மண்பாண்ட தொழிற்கூடங்களுக்கும் வைக்கோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாட்டுச்சம்பா, ஆணைகொம்பன், பொன்உருதி, பூம்பாலை போன்ற நெல்வித்துகள் தமிழகத்தின் பூா்வீக நெல் வித்துகளாகும். இவற்றின் மூலம் திரட்சியான நெல்மணிகளும், கூடுதல் உயரத்துடன் வைக்கோலும் கிடைத்தன. இப்போது அவை இல்லை.

ஆள்கள் வைத்து அறுவடை செய்யாமல் இயந்திரத்தால் அறுவடை செய்வதும் வைக்கோல் அதிகம் கிடைப்பதைத் தடுக்கிறது. அதேநேரத்தில் இப்போது இயந்திரத்தின் உதவியோடு வைக்கோல் கட்டுகள் கட்டுவதால் ஆள்கள் தேவை குறைந்துள்ளதோடு, கட்டுகளையும் கூடுதல் நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடிகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com